Thursday, 19 December 2013

என்னை போல் தானே நீயும்!!!


என்னை போலவே,
எண்ணம் சுமந்து ,
மண்ணில் அவளும், 
பிறந்திருப்பாள் !!

கயவன் ஒருவன், 
கலைத்த கனவினில், 
கலைந்து கிடந்தாள், 
சாலையோரம்!! 

கடந்து சென்றது, 
கட கடவென பேருந்துகள் ,
மட மடவென மனிதர்கள் ,
வேகம் குறையாமல் !!

தீண்டிய பார்வைகள் ,
திட்டி தீர்த்தது கொஞ்சம், 
பாவம் என்றது மிச்சம் ,
பாசம் தாராமல் !!

மூடன் ஒருவன் ,
மீண்டும் தீண்ட ,
அஞ்சி நடுங்கிய கண்கள் ,
இன்றும் கண்ணில் !!

இருபது ரூபாயை ,
இறுக்க கையில் திணித்து ,
காப்பாற்று என்ற கண்கள் ,
இன்றும் நெஞ்சில் !!

போர்வை போர்த்தி,
பத்திரம் செய்து ,
வழியனுப்பிய பின்னும் ,
இன்றும் மனதில் நீ !!

என்னை போலவே ,
எண்ணம் சுமந்து ,
கனவு கோட்டை ,
நீயும் செய்து இருப்பாயே  பெண்ணே !!!

Wednesday, 11 December 2013

என்னவன் பாரதி!!



தாலாட்டு அறிந்தேன்
உன் கண்ணம்மாவை
என் அம்மா சொன்னதால்!!

அச்சம்  தவிர்த்தேன்
உச்சி தொட்டு
என் தந்தை உன்னை சொன்னதால்!!

தேசியம் அறிந்தேன்
உன் "எந்தையும் தாயும்"
என் சிந்தையில் நின்றதால்!!

கனவுகள் சுமந்தேன்
"வானகம் இங்கு தென்பட"
எண்ணம் நீ தந்ததால்!!

கர்வம் சுமந்தேன்
உன் "புதுமை பெண் "
எனக்கு முன்மாதிரி ஆனதால்!!


கவிதை சேர்த்தேன்
உன் வார்த்தை கைகள்
என் விரல் பிடித்ததால்!!

தலையணை  பக்கம்
உன் பக்கங்கள் சொல்லும்
சொற்கள் எனக்கு சுகமாகும்!!

வேடிக்கை மனிதரின்
வாடிக்கை உலகில்
தேடி எனக்கு மாயம் செய்தாய்!!

எனக்குள் நிறைந்த
என் ஆத்ம நண்பன் ஒருவன் !!
என்னவன் பாரதி!!


Friday, 29 November 2013

மிச்சம் பிடித்தவை !!!


அரை ஜான் வயிற்றை,
அடக்கி படைத்திருந்தால்,
அண்டம் தேடி இருக்காது,
ஆண்டவனையும்,
அணு குண்டையும்!!

நாக்கின் நீளம்,
நடுவில் நின்றிருந்தால், 
நானிலம் நாடி இருக்காது,
நாகரிகங்களையும்,
நாடு தேசங்களையும்!!

அறிவின் ஆழம்,
அமுக்க பட்டிருந்தால்,
அகிலம் அமைத்து இருக்காது ,
அரசியலையும்,
அரசாங்கத்தையும்!!

மூடர் மண்ணின்,
மூலை முடுக்கில்,
மூளை முழுக்க செலுத்திவிட்டோம்,
முழுமை இழந்து,
முதுமை மட்டும்,
மிச்சம் பிடித்தோம்!!  

Friday, 22 November 2013

வேடிக்கை மனிதர்கள்


அண்டம் கண்ட அந்நியர் !
அண்டம் தின்றே வளர்ந்திடுவார் !!
காற்று தந்த மண்டலமும்,
கரியாய் மாறி கரைசேரும்!!
அரைஜான் உறுப்பின் வாதத்திற்கு,
அத்தனை உயிரிலும் பதில்தேடும் !!
தண்ணீர் தந்த பூமிக்கே,
தாகம் சேர்த்து சென்றிடுவார்!! 
வாழ்க்கை தந்த காடுகளின்,
வாழும் வழியை விழுங்கிடுவார்!!
கண்ணில் காணும் குப்பையிலும்,
காகித வர்த்தகம் செய்திடுவார்!! 
மண்ணின் கடைசி துகளிலும்,
மாடி ஒன்று சேர்த்திடுவார்!!
கடைசி இலையின் நுனியினிலும்
கட்டம் கட்டி ஆராய்ந்திடுவார்!!
வேடிக்கை மனிதனின்,
வாடிக்கை உலகில்,
உயிர்கள் இழந்திடும் மூச்சினை!!
அஃறினை ஆண்டிடும் இந்த மூடனை!!!

Wednesday, 6 November 2013

சரஸ்வதி பூஜையும் சமூகப் பிரச்சனையும்!!


பூஜை அறையில்,
அணி வகுத்தது,
புத்தகங்களும் பேனாக்களும் !!

பக்கத்திலே பக்குவமாய்,
இடம் பிடித்தது,
தம்பூராவும் ஹார்மோனியமும் !!

சகலமும்  செய்வாள்
சரஸ்வதி - தந்தை
சொல்லி சென்றார் !!

நான் படித்த பாடம்,
சரஸ்வதியும் படிக்க,
புத்தகம் ஒன்று தேடினேன்!!

சென்னை தெருக்களில்
தேடி பிடித்து
சமர்ப்பித்தேன் சரஸ்வதிக்கு !!
"இந்தியாவின் சமூக பிரச்சனைகள்
                                 --இரண்டாம் பதிப்பு "

Thursday, 24 October 2013

உன்னதமொன்று உதிர்த்தேன்!!


நித்தம் நித்தம்
நின்னை நானே
நேசிக்கின்றேன்  
நிஜமாய் தானே!!

சத்தம் சபலம்
சலனம் சற்றும்
சிந்தாமலே
சிதறிச் சேர்ந்தேன்!!

பட்டம் பக்கம்
பூக்கள் போல
பஞ்சமின்றி
பூத்து நின்றேன் !!

கட்டம் கட்டி
கனவு கதவை
கட்டிப்போட்டும்
கண்ணுக்குள் வந்தாய்!!

வதன வெட்கம்
விதியின் வழியில்
விதைத்துபோக
விழியில் சேர்ந்தாய்!!

அரவமில்லா அகரம்
அங்குமிங்கும் அசையும்
அகத்தினுள்ளே
அத்தனையும்  கண்டுவிடு!!

உனக்கே உனக்காக
உள்ளத்தின் உள்ளே
உன்னதமொன்று
உதிர்த்தேன் - உணர்ந்துவிடு !!   

Tuesday, 22 October 2013

பருவ மழை!!


மொத்தமாய் திருட ...
சித்தத்தை வருட....
கண்ணுக்குள் மறைய..
கன்னத்தில் கரைய..
மேகமாய் திரள..
மேனியில் உருள..
வெப்பங்கள் அடங்க...
சிலிர்ப்புகள் தொடங்க...
என் ஆடையாய் மாற...
என் வாடையில் சேர...
சின்னதாய் பிணைய...
செல்லமாய் இணைய...
மிச்சம் இல்லாமல்...
மோட்சம் கொண்டிட...
என்னிடம் வந்துவிட்டான்...
வடகிழக்கு கள்வன்!!!


Saturday, 12 October 2013

இசை உலகம்!!!


பிறப்போடு பிறக்கும் அதிசயம்!!
இறப்பிலும் பிரியா ரகசியம் !
சத்த கவிதைகளாய் ,
நித்தம் வருடும் !
பேசும் நிழல்களாய்,
பக்கம் நடைபயிலும்!
காலை நேர இரவுகளை, 
ராகம் சேர்க்கும் என்னிடம்!
இரவின் காலை பக்கங்கள்,
மெட்டுகளில் மொட்டு விடும்!
செவிகள் உணரும் நேரம்,
இதயம் மெல்ல உருகும் !
நரம்பின் மூலை முடுக்கும்,
புது மொழி ஒன்று சுமக்கும்!
என் சிரிப்பின் பின்னே,
மறைந்து இருக்கும்!
என் கண்ணீர் மறைக்க,
துணை இருக்கும்!
தனிமை சுகங்கள்
அந்த உலகில் இல்லை!
அவை  இல்லா உலகம்
எனக்கும் தேவை இல்லை!
உன்னுள்ளும் தோன்றும்,
என்னுள்ளும்  தோன்றும் ,
உனக்காகவும் பிறக்கும் ,
எனக்காகவும் பிறக்கும் ,
உலகம் சுமக்கும் ஒரு
பொது உடைமை!
எல்லைகள் கடந்த அந்த
இசை வலிமை!
இசை இல்லா விடியல்கள்
கண்டதில்லை இதுவரையில்!!
இசை இல்லா இரவுகளும்
கடந்ததில்லை இன்றுவரையில் !!
இசை இல்லா
ஓர் உலகம்?
கனவிலும் வேண்டாம்
ஒரு பொழுதும்!!!


Saturday, 5 October 2013

புத்தகம் என்னும் வித்தகன்!!!


மொத்த வாசனை முகர்ந்து,
 முத்த தழுவலில் ஆரம்பிக்கும்!!
பித்தம்  உச்சிவரை ஏறும்,
 முதல் பக்கம் திருப்பும்போது!!
எழுத்தின் நடுவில் புகுந்து,
 கட்டி அணைக்க தோன்றும்!!
வார்த்தை விரிப்பில் ஏறி,
 உலகை ஆள  முயலும்!!
கதையின் உள்ளே சென்று,
 காட்சி மாற்ற திணறும்!!
கனவிலும் மிதந்து வாழ,
 ஒரு புதுக்கதை விட்டுச்செல்லும்!!
வாட்டர்லூ போரின் விளிம்பில்,
 நெப்போலியன் வீரியம் அறியலாம்!!
வாதாபி கடவுளின் தந்தம்,
 தொலைந்த இடத்தையும் காணலாம்!!
காதல் ரோமியோ கண்முன்னே,
 ஜூலியட் தூக்கி செல்வானே !!
பாலை வனத்தின் பாதைகளையும், 
 அத்துபிடி ஆக்கி செல்லுமே!!
தேடி திரியும் நாட்களுக்கு,  
 பதில்கள் ஆயிரம் தந்துவிடும்!!
தனிமை தழுவும் வேளையிலும்,
 என்னை தழுவி மாயம்செய்யும் !!
அஃறினை நண்பன் அவன்!!
 தொற்றிகொள்ளும் காதலன் அவன்!!
பக்கங்கள் என்னும் சதை சுமந்து,
 புத்தக வடிவில் உலகை ஆள்பவன் !!
குட்டென்பெர்க்கின் மூளை குழந்தை,
 உலகம் சுமக்கும் பேதை குழந்தை!!
மறுஜென்மம் உண்மை என்றேன்
 ஒவ்வொறு புத்தகத்தின் முடிவிலும்!!
கோடி பிறவிகள் நிச்சயம் சாத்தியம்
 புத்தகம் பக்கம் நம் பக்கங்கள் சென்றால்!! 

Tuesday, 24 September 2013

சுற்றம் எங்கும் வலிதானடா !!


ஒரு வலி மறக்க
ஒரு நொடி துணிந்தான்
ஒரு திசை துறக்க
ஒரு வழியில் யோசித்தான்
தூக்கி சென்ற தோள்களை
தூரம் வைத்து பார்த்தானே 
அன்னம் தந்த கைகளையும்
அந்நியம் என்று நினைத்தானோ
பூட்டி கொண்டு அழுதாலும்
பூரணமாய் வாழ்க்கை சொல்வான்
குமுறி குமுறி அழுகின்றோம்
குடையும் கையில் அசைவில்லையே
உன்னை நீயாய் மாய்த்தாயே
உறவின் அர்த்தம் அழித்தாயே
நினைத்து பார்க்க ஒரு நொடிக்கு
நினைவுகள் நங்கள் தரவில்லையா 
உன் வலி நீ மறக்க ,
உலகம்  விட்டு சென்றுவிட்டாய்!!
சுற்றி சுற்றி பார்த்தாலும்,
சுற்றம் எங்கும் இன்று வலிதானடா !!
புத்தம் புது சுயநலவாதியே!!
தற்கொலை என்று நீ நினைத்தாய்
அட கோழை நண்பா!!
எங்கள் உணர்வை அல்லவா
நீ கொலை செய்கின்றாய் ??
சாவின் விளிம்பு  நொடி மட்டும்  உனக்கு !!
ஒவ்வொரு நாழிகை வேளையிலும்,
ஒருநூறு ஜீவன் சுவைக்கின்றது,
சாவின் விளிம்பு வலியை - உன்னால்!!
முடிவு  என்று நீ நினைத்தாய் !!
முடியாமல் புது வேதனை தொடக்கி சென்றாயே !! 

Monday, 16 September 2013

சித்தம் வேண்டும் ஒரு பூமி!!!


சுழன்று சுழன்று கலைத்து போன
 என் உலகமே நீ உறைந்துவிடு !!
புதிதாய் ஒரு பூமி ஒன்றை
 படைக்க போகின்றோம் வழி விடு !!
செயற்கையாய் ஒரு கோள் எதற்கு
 இயற்கையில் வாழ வழி இருக்கு !!
பிரிவு செய்திடும் மொழி வேண்டாம்
 பரிவு பாஷைகள் இனி போதும் !!
எல்லை கோடுகள் இங்கு வேண்டாமே
 தேச நேசமும் இங்கு வேண்டாமே!!
அண்டத்தில் ஒரு சிறை செய்வேன்
 கடவுளை அங்கேயே நிறுத்தி வைப்பேன் !!
மனிதம் வீசிடும் என் பூமியிலே
 புனிதம் வேறொன்றும் தேவை இல்லை!!
பாச நேசங்கள் வளர்த்து வைப்பேன்
 ஓட்டு வேஷங்கள் துறக்க வைப்பேன் !!
அரசாங்கம் அங்கு தேவை இல்லை
 எங்கள் மூச்சிற்கு  வேறு பங்கம் இல்லை !!
ஆசை பாதைகள் போட்டு வைப்பேன்
 அன்பு வேதியியல் மட்டும்  நிகழச்செய்வேன்!!
புத்தம் புதிதாய் என் சித்தம் கேட்கும்
 பூமி ஒன்று வேண்டும் இன்று !!
யுத்தம் காணாத காற்று மண்டலம்
 என் சுவாசம் சேரனும் தினந்தோறும் !!
இரத்தம் உறையும்  இறுதி நிமிடத்திலும்
 புன்னகை சிந்தி உயிர் அடங்கிட வேண்டும் !!

Friday, 13 September 2013

என் கனவே !! என் சிலிர்ப்பே !!


என் உள்ளங்கையின் ரேகை எல்லாம்
 தவம் செய்து தினம் துடிக்கின்றது
என் ஆயுள்ரேகை நீளச் செய்யும்
 உன் நடுவிரலின் தீண்டல் சுமந்திட!!
என் தலையணை என்னை பழிக்கின்றது
 கனவில் உன் முகம் இல்லை என்றால்..!!
என் இரவுகள் நகன்றிட மறுக்கின்றது
 உன் நினைவுகள் சுமக்கும் நாழிகையால்!!
என் காலைநேர விடியல் எல்லாம்
 நம் பார்வைகளின் யுத்த முத்ததிற்கே!!
என் சுடிதார்களுக்குள் சண்டை மூளுது 
 உன் விழித்திரையில் நிழலாய் மாற !!
என் கன்னத்தசைகள்  காத்து  கிடக்குது 
 உன் வருகையால் நிகழும் வெட்க அசைவுக்கு !!
மெல்ல மெல்ல மாற்றம் பிறந்தது!!
 என் அழகின் மாற்றம் புதிரை உடைத்தது!!
உன் விரல்கள் மீது நீ  தாடை பதித்து
 ஓரம் பார்த்த பார்வையில் தொலைந்தேன்!!
புருவம் தூக்கி என் பருவம்  வென்றாய்!!
கர்வம் கலைத்து திருடி சென்றாய்!!
என்னுள் உன்னை மெல்ல விதைத்தாய்!!
உந்தன் சிலிர்ப்பை உணரச் செய்தாய்!!
என் கனவே !!
என் சிலிர்ப்பே !!
என் நாடியின் துடிப்பாய் ஆனாயே!!
உனக்குள்ளே என்னை விதைத்தேன் !!
உன்னை திருடியே நான் நானாகின்றேன்!! 

Sunday, 1 September 2013

நீ இல்லா என் நிமிடங்கள்!!!

என்னுள் புகுந்து என்னை இழுக்கும்
 பார்வையின்  தீண்டல் தொலைவிலே !!
கன்னம் சிவக்க காதல் பேசும்
 இதழ்களின் அசைவு கனவினிலே !!
என் நாசி கடக்கும் தென்றல்
 உன் பெயர் மட்டும் சுமக்கின்றதே!!
தினம் தினம் கடக்கும் சாலைகளும்
 என்னை தனியாய் தாங்க மறுக்கின்றது !!
ஒரு விழி மட்டும் மைதீட்டி
 மறு விழி மறந்து  நடக்கின்றேன் !!
என் துப்பட்டாவின் ஓரம் எல்லாம்
 உன் வியர்வை துளியை கேட்கின்றது !!
என் இரவுகள் எல்லாம் நீயின்றி
 உன் கதைகள் சுமக்க ஏங்குதடா !!
நான் கேட்கும் இசை எல்லாம்
 உன் குரலாய் மாறி கொல்லுதடா !!
உன் ஓரப்பார்வையின் மொழி படிக்க
 ஒவ்வாரு நொடியிலும் ஏங்குகின்றேன்!!
கண்ணீர் வார்த்தையை கற்று தந்திட
 இத்தனை தூரம் சென்றாயோ!!
என் பிறவியின் முடிவே !!!
நீ இல்லா என் நிமிடங்களை
 களவாடி செல்ல வந்துவிடு !!
என் விழியின் ஓரம் வழியும் நீரை
 உன் இதழில் சீக்கிரம் சுமந்துவிடு !!

Monday, 26 August 2013

கற்கண்டு கண்ணீர் காலங்கள் !!!

கனவுகள் தந்திடும் சுகங்களிலே
மெல்ல பிறந்திடும் விழி நீரே!!
என் திசைகளில் எங்கும் நீ இருந்தால்
ஆனந்தம் ஆகிடும் என் ஆயுளே !!

கதைகளை செவிகளில் சேர்த்தப்பின்னே,
தேவதை உறங்கும் அழகினிலே,
தாயின் தாளக்  கொட்டாவி
சிந்தும் கண்ணீர் ராகங்களை!!

பட்டுப் புடவை மடிப்புகளை,
மெல்ல மெல்ல சரிசெய்து,
தந்தை முகம் பார்க்கையில்,
விழி வழி பதிலாய் துளி வந்து சேரும்!!!

தயங்கி தயங்கி விழி பார்த்து,
தயக்கம் மறந்து இதழ் சேர்க்கும்,
முதல் முத்தத்தின் முடிவில் ,
முகம்சேரும் அழகிய கண்ணீர் துளி !!

வலிகள் தீர்க்கும் விரல்களின் நடுவில்,
தாடை பதித்து இதழ்கள் விரித்து ,
புருவம் சுருக்கி சுவாசம் நீளும்,
நொடிகளின் முடிவிலும் சிறு துளி வரும்!!

சுகங்களின் சுமைகள் நீளும் வேளையில்,
நெஞ்சின் முடிப்புகள் துடிக்கும் ஓசையில்,
சின்ன சின்னதாய் கண்களில் சிலிர்க்கும்,
மனிதம் விரும்பும் ஆனந்த கண்ணீர் !!

Thursday, 22 August 2013

என்னவனே...!!!


என் கன்னக்குழி நடுவினில்
 காதல் நிறைத்தாய்!!
என் வளையலின் நுனியினில்
 முத்தம் பதித்தாய்!!
என் விரல்களின் எண்ணிக்கை
 உன் விரல்களே அறியும்!!
என் காதலின் வண்ணங்கள்
 உன் கருவிழி அறியும்!!
உன் சட்டைக்கையின்  நுனியினில்
என் கட்டைவிரல் காதல்செய்யும்!!
உன் தோள்களின் கேள்விக்கு
 என் கூந்தல்நுனி கதை தரும் !!
நம் விழிகள் பேசும் வேளையினில்
 என் இதயம் உறைவதை உணர்கின்றேன்!!
நீ நகரும் ஒவ்வொரு நொடியினிலும்
 உன்னுடன் வரவே துடிக்கின்றேன்!!
தினம் தினம் உந்தன் பார்வையினாலே
 ஏக்கங்கள் கோடி  தருகின்றாய்!!
நொடிகள்  ஒன்றையும் தவற விடாமல்
 வியப்புகள் ஆயிரம் சேர்க்கின்றாய் !!
எனக்கே எனக்கானவனே....
உன்னில் என்னை சேர்த்துவிடு !!
 என் இதய துடிப்பையும் திருடிவிடு !! 

Tuesday, 20 August 2013

அன்பு உயிர் பெறும் போது!!!


உயிர் உருக்கி பாசம் தருவான்
இரத்த நாளங்களில் தேன் சுமப்பான்
தலை சாய்க்க இடம் தருவான்
திசை காட்ட விரல் பிடிப்பான்

நான் பேசும் மொழிகள்  எல்லாம்
அவன் சொன்ன வார்த்தைகளை சுமக்கும்
இலக்கணங்கள் யாவும் சொல்லி தந்தான்
கண்ணீரின் அர்த்தத்தை மறைத்து வைத்தான்

வானம் என்று நான் சொன்னால்
வானவில்லால் பாதை அமைப்பான்
தாகம் என்று இமைகள் அசைந்தால்
அவன் ஜீவனும் முந்திவரும்

கையில் வந்த தேவதை  என்று
பொய்கள் பூசி பாசம் நெய்திடுவான்
நான் கொடுக்கும் சுடு நீரும்
சபாஷ் ரசம் ஆகும் அவனிடத்தில்

கம்பன் மீண்டும் பிறந்தாலும்
மொழிகள் புதிதாய் படைத்தாலும்
இந்த உறவின் அழகு புரியாது
இந்த அன்பின் இணைப்பும் தெரியாது
அண்ணன்களும் -தங்கைகளும் !!! 

Thursday, 8 August 2013

என் உயிர் தோல்வியே!!


இரவுகளின் தோல்விகளை
 விடியல்களாய் காண்கின்றோம்!!
நிலவொளியின் தோல்வியினை
 ஆதவனில் பார்க்கின்றோம் !!
அலைகளின் தோல்வி படலங்களே
 கடற்கரை அழகாய் மாறியதே!!
தோல்வியின் சவுக்கடி சுமைகள்
 வெற்றியின் முத்தங்களை சுமந்திடவே!!
தோல்விக்கும் பதில்கள் தந்துவிடு
  முயற்சியை  பரிசாய் மாற்றிவிடு !!
வீழ்ந்திட எதற்கு மனித அவதாரம்
 வாழ்ந்திடவே  கொண்டோம்  வலிமையினை !!
தோல்விகள் எல்லாம் தோல்விகள் இல்லை
 உன் முயற்சிகள் கல்லறை சேரும்வரை !!
வெற்றிகள் எல்லாம் இனிப்பதும் இல்லை
 தோல்வியின் சுவையை கடக்கும் வரை !!
கண்ணீர்களும் அர்த்தங்கள் சுமக்கும்
 தோல்வி விதைகள் வெற்றி மரமானால் !!
சரிதைகளும் உன் பெயர் சொல்லும்
 தோல்விகள் உன் வாழ்க்கைக்கு உரமானால் !!

Thursday, 1 August 2013

நட்சத்திர பாவை !!!


தேவதையாய் மண்ணில் வந்தாய்
நட்சத்திரங்களை கண்களாய் சுமந்து வந்தாய்
உன் சின்ன கால்கள் என் கைகளை தொட்டதும்
உன் பிஞ்சு விரல்கள் என் கன்னம் தொட்டதும்
இன்னும் அழியா  வியப்பாய் !!
பிரார்த்தனைகளில் நம்பிக்கை கொண்டேன்
எங்கள் பிரார்த்தனைகளின் பலனாய் 
நீ நம் வீட்டை சேர்ந்ததால்!!
உன் காலை விடியல் அட்டகாசங்கள்,
நம் வீட்டின் வானவில் பக்கங்கள்!!
உன் மாலை நேர திருவிளையாடல்கள்,
நம் வீட்டில் சேர்க்கும் சிரிப்பு சப்தங்கள்!!
"ச்சீ  போ " என்ற சண்டை நிமிடங்களும்,
"அக்கா " என்னும்  பாச பிணைப்புகளும்,
கிள்ளி வைத்து ஓடி ஒளியும் கள்ளத்தனமும்,
தூக்கத்தில் கட்டி அணைத்து தூங்கும் மனமும்,
என் மீது நீ கொண்ட பாசம் சொல்லும்!!
உன் மீது நான் வைத்த நேசம் சொல்லும்!!
நமக்குள்ளும் ரகசியங்கள் உண்டு !!
ரகசியங்களை உடைக்கும் நிமிடங்களும் உண்டு !!
நான் செய்யும் கருகிய தோசையும்,
உன் நாவை சேரும் சந்தோசமாய் !!
சுகங்கள் தரும் என் சின்ன தேவதையே!!
என் பக்கங்களை நிரப்பும் சித்திரமே !!
உன் தலை கோதிட என் கைகள் உண்டு !!
உன் கன்னங்களுக்கு என் முத்தங்கள் உண்டு!!
அன்புள்ள தங்கையே!!
முதல் முறை என் பாசம் எழுத்துகளாய்!!
உனக்கே உனக்காக மட்டும்!!!
 




Saturday, 27 July 2013

காதல் சொல்லடி தோழியே!!!


என் வாழ்வின் கிழக்கு திசையினிலே
எனக்கான விடியலாய் வந்தவளே !!
என் இரத்த துளிகளின் இடையினிலே
அன்பின் சாயம் தந்தவளே !
தோழியே ! என் தோழியே !
கரைகின்றேன் உன் அன்பின் வெப்பத்திலே !
உன் இமைகளின் ஓரம் வழிந்திடும் கண்ணீர்
என் தோள்களை சேர்ந்திட காத்து நிற்கின்றேன்!!
உன் கருவிழி ஓட்டம் என் இமைகளை சேர
என் ஏக்கங்கள் சுமந்து சுவாசம் செய்கின்றேன்!
என் இதயத்தின் துடிப்பின் அர்த்தங்கள் அறிந்தவளே !
உன் பார்வையின் சுகங்களை என் வாழ்விற்கு அளிப்பாயா?
என் பிறவியின் அர்த்தம் நீ தான் பெண்ணே !
என்னையும் கவிதை செய்வாயா..?
உன் கண்கள் சிமிட்டும் இசை மொழியால்
என் பாதைக்கு வர்ணங்கள் சேர்ப்பாயா?
என் பாதங்கள் உன்னை நோக்கியே !
ஒரு முறை உன் நெஞ்சுக்குள் அழைப்பாயா?
உன் புன்னகை தீண்டல் போதுமடி!!
என் ஜென்மங்கள் ஏழும் சொர்க்கமடி!!    

Tuesday, 16 July 2013

கரைகின்றேன் மெல்ல!!!


அந்தி வேளையின் ஆகாய மேகங்களில்
என் நெஞ்சை செலுத்தி பார்க்கின்றேன்..
மேகங்களின் தேவதை என் மனதை திருடி,
உன் முகத்தை பரிசாய் அளித்தது...
என் கள்ளத்தனம் வெளிப்பட்டதால்,
பார்வை விலக்கி தேநீர் கோப்பையில் செலுத்தினேன்..
என் தேநீர் கோப்பை  மஞ்சள் பொம்மை,
என்னை நோக்கி கண் அடிக்கின்றதே..
என் முகம் கூட உன் முகமாய்
காட்டி சிரிக்கின்றது என் வீட்டு கண்ணாடி...
உன் கள்ளத்தனம் செய்யும் கண்ணில் விழுந்தேனோ ?
உன் உள்ளம் உணர்த்திய அன்பில் கரைந்தேனோ ?
முதல் முறையாய் உணர்கின்றது என்  சுவாசம்
ஒரு ஆணின் வாசம் என்னுள் கலப்பதை..!! 

Friday, 12 July 2013

அ..ப்...பா...!!!


மண்ணில் வந்த நொடி முதலாய் என்னை
கண்ணில் சுமக்கும் ஆண் மகனே !!
தேவதை என்றே என்னை அறிமுகம் செய்வாய்!!
உன் ராணி என்றே என்னை வளர செய்தாய் !!
பள்ளி செல்லும் அவசர  நாளிலும்,
நமக்குள் உண்டு விளையாட்டு !!
உன் தோளில் கால்கள் பதித்திடுவேன்..
சிரித்து கொண்டே காலணி அணிவிப்பாய் !!
உன் விரல்கள் பிடித்து ஆடிய நடனங்கள்,
அதுவே என் உலகை அழகாக்கும் நினைவுகள் !!!
உந்தன் மீது கால்கள் போட்டு தூங்கிய நாட்கள் ,
அதுவே என் வாழ்வின் சொர்க்கம் தொட்ட  பக்கங்கள் !!
என் இதழ்கள் பேசும் முன்னே,
என் ஆசைகள் அறியும் உன் கண்ணே !!
என் கண்ணில் ஈரம் கண்டால்,
இந்த உலகே உனக்கு பாரமே !!
அப்பா என்று ஆயிரம் முறை அழைத்தாலும்,
கண்ணே என்று மட்டுமே உன் குரல் என்னை அழைக்கும்!!
இருபது முறை ஆடை மாற்றி வந்தாலும்,
சிரிப்புடன் உண்மைகள் சொல்வது தந்தை உள்ளம் மட்டுமே !!
என் பக்கங்களின் முதல் ஆர்வலனே !
என் சத்தங்களின் முதல் ரசிகனும் நீயே !!
அந்த அன்பு  அணைப்புகளும்,
என் நெற்றி சுமக்கும் உன் முத்தங்களும்,
சின்ன இமை அசைவும் போதுமே !!
மொத்த உலகையும்  சட்டென்று வென்று வர!!!
மகள்கள் மட்டுமே அறிய முடியும்
அப்பா என்ற உச்சரிப்பு தரும் சுகங்களை !!!


Wednesday, 10 July 2013

என் நண்பன்!!


தன் பாதங்களின் பயண பதிப்புகளில்,
தன் நட்புகளின் பக்கங்கள் சேர்ப்பவன்..
ஒரு அடி நடந்திடும் வேளையில்,
ஓராயிரம் திட்டங்கள் தீட்டுவான்..
மழைத்துளி விரல்நகம் தீண்டும் சத்தத்தில் ,
இசைமொழி காணும் ரசிகன் அவன்..
புத்தகங்களின் பக்கங்களில் உயிர் காண்பவன்..
பக்கம் தவறாமல் எழுத்துகளுடன் காதல் கொள்பவன் ..
தூக்கத்தின் நடுவிலும் விழித்திருப்பான் ..
தூரத்து தோழர்களை நினைவில் சுமப்பான் ..
நம் நடுநிசி அழைப்புகளும்,
புன்னகை பதிலை பெற்றிடும் அவனிடம்..
நம் கிறுக்கல்களும் புலம்பல்களும் கூட,
கவிதை என்றே  அவன் அரங்கேற்றுவான் ...
பாரதியின் பக்கம் சொன்ன தைரியங்களும் 
இவன் நட்பின் உலகில் உணர்ந்திடலாம் ..
என்றும் என்றென்றும்,
அவன் அன்பின் மேகம் நம்மை சூழ
ஏக்கம் தரும் ஜீவன் அவன் - என் நண்பன்!!!

Sunday, 30 June 2013

நானும் உன் புகைப்படமும்


உன் நிழல்படத்தின் பார்வையும்,
என் பார்வைக்கு வெட்கங்கள் தந்துவிடும்..
உன் சட்டையின் மூன்றாம் பட்டனின் மேலே,
என் விரல்கள் ரகசியம் சொல்கின்றது...
என் இதழ் தொட்ட விரல் ,
உன் நெற்றி தீண்டும் போது..
நிஜமாய் கசிந்திடும் உன் நெற்றியில் ஈரம்,
என் காதலின் உணர்வை சொல்லும்...
என் புத்தகம் நடுவே எட்டி பார்க்கும்,
உன் புகைப்படம் செதுக்கிடும் என் நாட்களை...
உன் நிழலுருவம் நிஜமாய் இமைப்பதை,
என் நெஞ்சம் அறிந்து வெட்கம் சுமந்து,
இமைகளை மெல்ல மூடுகின்றேன்...
கனவுகளில் நம் பயணங்களை மீண்டும்  தொடர்கின்றேன் ...

Friday, 21 June 2013

இது ஏமாற்றமா...?


நிஜங்களின் நடைப்பயணம் நிழல்களின் திசையில் 
உயிர்களின் ஓட்டம் உயிரற்றதின் தேடலில்... 
கொள்கைக்கான தியாகங்கள் மடிந்து போனது 
இன்று கொள்கைகளே  தியாகங்களாய் ஆனது.. 
சமூக அக்கறை கூட நமக்கான  பேருந்து 
நம் முன்னே வரும் வரையில் மட்டுமே.. 
நாட்டின் நடப்புகள் கூட நண்பன் 
சொல்லும் தேநீர் நேர செய்திகளில் தான்.. 
ஃபேஸ்புக்  கூட அரசியல் தந்திரமே 
உன் கோபங்களை உன் சுவரோடு நிறுத்திவைக்க...
நம் ஏமாற்றங்களை நாம் அறிவோமா ?

Thursday, 13 June 2013

தொலைதூர காதலா!!


என்னை கடந்த மேகங்களிடம்
என் மனதை சொல்லி அனுப்புகின்றேன் 
உன்னை தீண்டும் மழைத்துளிகள் 
என்னை உனக்கு சொல்லிடுமா?
குறுஞ்செய்தியில் குறிப்புகளாய் 
உன் காதல் அழகாய் சொல்கின்றாய்..
உன் வார்த்தைகளின் மாயங்களால் 
என் இறந்த காலத்தையும் வெல்கின்றாய் ..
என் நிழலும் உன் நிழலும் 
கைகோர்க்கும் தருணம் என்று தருவாய் நீ ?
உன் கை விரல் என் ரேகையை 
தீண்டும் நேரம் எப்பொழுது ?
என் இதயத்தை என் விழி வழியாய் 
நீ காணும் நிமிடம் தந்துவிடு !!
என் தொலைதூர காதலனே!!
உன் மார்பு சூட்டில் நான் கரைய
கனவுகள் கொண்டு காத்திருக்கின்றேன் !!!

Sunday, 26 May 2013

சிட்டு குருவியின் இருப்பிடம் எங்கே??


காலை தென்றலை மறந்து,
 காய்ந்த ரொட்டியை மென்று,
அரைகுறை தூக்கத்தில் நடந்து,
 அவசரமாய் காகித பேயை பிடிக்க ஓடுவது,
நாளை வரும் நம் சந்ததிக்கு,
 நுண்ணிய பதில்களை தருவதற்கே..!!!
#சிட்டு குருவியின் இருப்பிடம் எங்கே??
 என் அப்பாவின் லேப்டாப்பிலே!!!


Sunday, 12 May 2013

அ...ம்....மா....!!!


காலை தூக்கத்தின் ஐந்து நிமிட நீட்டிப்பிற்கு
சபித்து கொண்டே சம்மதம் சொல்வாள்..
எண்ணெய் இல்லாமல் தலையை வாரினால்
திட்டி கொண்டே அழகாய் திருத்தம் செய்வாள்..
என் கண்ணின்  தேடல் அறிந்தே
என் பாதையில் பயணம்  செய்வாள் ..
அவள்  மடி மீது தலை சாய்க்கும் சுகத்திற்கு
உவமைகள் ஏதும் இந்த உலகத்தில் இல்லை...
என் கண்ணின் ஈரம் அவள்  நெஞ்சில் செய்யும் மாயத்திற்கு
எந்த அறிவியலும் பதில் சொன்னது இல்லை ..
அவள் உதிரம் உருக்கி எனக்கு உயிர்நாடி செய்தாள்..
அவள் இதயம் முழுதும் என்னையே பதித்தாள் ..
மறுஜென்மம் என்பது உண்மை என்றால்
அவள் கருப்பையில் மீண்டும் வாசம் செய்யவேண்டும் !!!

Tuesday, 30 April 2013

புத்தம் புது சுவாசம் !!!




ஓராயிரம் பரிமாற்றங்கள் பார்வைகளில்
 ஒரு கோடி புன்னகைகள் இதழோரத்தில்
தடுமாற்றங்கள் பல கடந்தபின்
 அறிமுகம் ஆனோம் அலைபேசியில்
குறுஞ்செய்தியில் விதை விதைத்தோம்
 குரல் வழியே நட்பை செய்தோம்
கதைகள் பல ஒன்றாய்  நெய்தோம்
 கவிதைகளை இணைந்தே ரசித்தோம்
என் ஆசைகளை அவனே அறிவான்
 அவன் பதில்களை நானே சொல்வேன்
ஒரு வியாழனின் அதிகாலையில்
  காதல் சொல்லி  சிலிர்க்க செய்தான்
என் கூந்தலை அவன் கைகளால்
 கோதிடவே ஆசை கொண்டான்
என் விரலோடு விரல் சேர்த்து
  உயிர் வாழ்ந்திட  கனவு  செய்தான்
எனக்காகவே அவன் பாதையில்
 புது திசையினை தீட்டி வைத்தான்
அவன் விருப்பங்கள் முழுதாய் அறிவேன்
 அவன் செயல்களின் அர்த்தமும் அறிவேன்
பதில் ஏதுமே எதிர்பாராமல்
 பயணம்  செய்கின்றான் என் வாழ்வில்
ஏங்கி ஏங்கி சேர்க்கின்றேன்
 அவன் பக்கங்களை என்  வாழ்க்கையில்
ரசிக்கின்றேன் !!
வியப்புகள் சேர்க்கின்றேன் !!
புதிர் செய்கின்றேன் !!
புதிதான பதிலைத் தேடி திரிகின்றேன் !!! 

Wednesday, 24 April 2013

யார் மனிதன் ?


தமிழை கற்று உலகம் அறிந்ததால்
தமிழன் என்று பெயரிட்டார்கள் !!
விந்தியம் கடந்த காற்றை சுவாசித்ததால்
இந்தியன் நீ என்று சொல்லி சென்றார்கள் !!
மனிதனை மனிதனாய் மட்டும் அங்கீகரிக்கும் 
மண்ணின் தேடல் மனிதத்தை தந்திடுமா ...
எனக்கு  கல்லறை செய்தால்  எழுதிடுங்கள் !!
எனக்கென இந்த உலகம் தந்த  பெயரை அல்ல !!
"இது ஒரு மனிதனின் கல்லறை " என்று ...!!




Monday, 22 April 2013

கலங்காதிரு மனமே!!!

கலங்காது இருந்திடு என் மனமே!
கரையாது இருந்திடு என் குணமே!
போற்றுவார் போற்றலில்  மயங்காதே !
தூற்றுவார் தூற்றலை ஏற்காதே !
உன் பாதையில்  நீ நடந்திடு !
உன் பயணத்தை இன்றே தொடங்கிவிடு !
பாதையில் முட்களை நீ கண்டால்
உன் முயற்சியை சற்றே முடுக்கி விடு !
பயணத்தில் கற்கள் விழுந்து விட்டால்
உன் கனவினை கூர்மை செய்துவிடு !
தடைகள் இல்லா தடயம் ஒன்றை
உலகில் விட்டு விட்டு செல்லாதே !
துயரம் காணாத வெற்றியை என்றும்
உன் சந்ததிக்கு சரித்திரம் சொல்லாதே !
பிறப்பினை கொண்டாடும் சரித்திரம் செய்யாதே !
இறப்பினை கொண்டாடும் விசித்திரம் செய்யாதே!
உன் வாழ்க்கையை கொண்டாட
பக்கங்கள் செய்து மண்ணுக்கு பரிசளித்திடு!!!



Friday, 12 April 2013

காதல் நேரம்!!!


விழியின்  ஓரம்  வழிந்து  ஓடும் மையினை
 உன் விரல் மெல்ல  தீண்டியே  முத்தம் சேர்க்கும் ...
எந்தன் நெற்றி குங்குமம் உன் நெற்றி  சேர்ந்திடும்
 அந்த இன்ப நொடி நாடியை உறைய வைக்கும் ...
புரியாமலே புதிராகவே உன் கைவிரல்  என் கையுடன்...
 என் ரேகையும் உன் பக்கமே தினம் நீள்கின்றதே...
அறியாமலே விழி பேசுமே ஓராயிரம் அர்த்தங்களை
 வெட்கங்களின் பரிமாற்றமும் அரங்கேறிடும் மெதுவாகவே ...
நம்  காதலை நாம் சொல்லிட பாஷைகளே தேவையில்லை
உன் விழியின் வார்த்தைகளை  நான்  அறிவேன் ..
என்  வெட்கங்களின்  பதிலையும்  நீ மட்டுமே  அறிவாய் ..!!!


Wednesday, 3 April 2013

என் நட்பின் பக்கங்கள்... !!!!

காலை காபியில் தேநீரையும்  கலந்து
 விடியலை  தொடங்கிய விடுதி  நாட்கள் ...
அரைமணி  நேர வரிசைக்கு  பரிசாய்
 கிடைத்த மொறு மொறு தோசை...
ஒரு தடவை கண் அடித்து விட்டு
 தோசையை இரணகளம் செய்யும் கைகள் ...
ஒரு வழியாக யுத்தங்கள் வென்று
 கல்லூரிக்கு கிளம்பும்  படை  ஒன்று ...
இறுதி  டச்-அப்  செய்யும்  தோழி  ஒருத்தி ...
 தன் மனதை கவர்ந்தவனை  தேடும்  இன்னொருத்தி ...
புத்தகங்களுடன் பேசி வரும் மற்றும் ஒருத்தி ...
 வானம் பார்த்து கவிதை சொல்லி நச்சரிக்கும்  ஒருத்தி ...
ஜோக் என்ற பெயரில் உயிர் எடுக்கும் ஒருத்தி ...
 இந்த பன்முக கூட்டம் நிச்சயம்  வகுப்பையும்  அடையும்...
தினமும் நடக்கும் கச்சேரியும் ஸ்ருதி தப்பாமல்
 வகுப்பில் அழகாய் அரங்கு ஏறிடும் ...
மீண்டும் விடுதிக்கு படை எடுக்கும்போது
 தடுக்கி விழும் படலம் நிகழும் ஒருத்திக்கு...
ஐந்து நிமிடம் சிரிப்பு எழுப்பி
 மொத்த ஊரின் கவனம் ஈர்ப்போம் முதலில் ...
அடுத்த நொடியில் அழகாய் நிகழும்
' தோள் கொடுப்பாள் தோழி'  படலம் ...
மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டே
 விடுதியை அடையும் அந்த ஊர்வன கூட்டம் ...
இரவு மெனுவில்  நூடுல்ஸ் கண்டதும்
 பந்திக்கு முந்தும் அத்தனை கால்களும் ...
நூடுல்ஸோடு தயிரை  கலக்கும்  புரட்சியும்  நடக்கும் ...
 முல்தானி மெட்டியை நாடும்  முகங்களும் மலரும் ...
நட்பின் பக்கங்களை பதிய நினைத்தால்
 என் வாழ்நாளும் போதாது ...
நான் அறிந்த வார்த்தைகளும்  போதாது...!!!

Thursday, 28 March 2013

சுகங்களின் சுமை!!!



நிமிடங்கள் ஒவ்வொன்றும்
  புதிதாய்   பூக்கின்றது ...
அவன் சிந்தும்  புன்னகையில்
 பூமியும்  பிடிக்கின்றது....
என்   பார்வை  அவனைத் தீண்ட
 ஆயிரம் கனவுகள் கொள்கின்றேன் ..
அடி தூரத்தில் அவன் வந்தால்
 சிலிர்த்து விலகி செல்கின்றேன் ...
ஒரு  வார்த்தை  பேசிடவே
 நூறு ஒத்திகை நடத்தினேன்...
ஒரு வார்த்தையும் அவன் செவியை
  தீண்டவில்லை  ஒரு பொழுதும்...
அவன்  காலணி சத்தம் போதும்
 அவன்  வருகையை கணிப்பதற்கு...
இருந்தும் அவன்  வரும் பாதையில்
 செல்ல தயங்கி நிற்கின்றேன்...
அவன் விரல் அசைவின் அழகையும்
 தவற விடாமல் ரசிக்கின்றேன்...
அவன்  பார்வை என்னை தீண்டினால்
 என் பார்வை விலக்கி  செல்கின்றேன் ...
அவனுக்காக  சேர்க்கும்  அன்பை  மறைப்பதும்
 புது வித சுகங்களின் சுமை தான்...!!

Wednesday, 20 March 2013

காடுகளுக்காக ஒரு நாள் !!!

மனித இனம் தோன்றிய இடமும்  அதுவே
மனிதத்தை வளர்த்த மண்ணும் அதுவே
நம் சுவாசத்தின் பிறப்பும் அங்கேயே
நம் சாம்பல் சேர்வதும் அங்கேயே
வாழ்வதற்காக செய்யா விட்டாலும்
நம்மை சாம்பல் செய்திட நிச்சயம்
மரம் என்னும் இனம் தேவை ...!!
இனப்படுகொலை எங்கும் வேண்டாம் !!!


என் மனமும் உன் நிழலும்!!!

நினைவுகளாய் சேர்த்து  வைத்த
 நொடிகள் ஒவ்வொன்றும் ,
வலிகளாய் நிதம் மாறி
  நெஞ்சை நொடிக்கின்றது ..
கை  கோர்த்த தருணம்
   கசந்து  நிற்கின்றது ...
சிந்திய சிரிப்புகள் எல்லாம்
 சிதைந்து கிடக்கின்றது ..
தீட்டிய வர்ணங்கள் அனைத்தும்
வெறுமையாய் மாறுகின்றது ...
வார்த்தைகளாய் பதிவு செய்தாலும்
 வேதனைகள் குறைவதில்லை ...
உந்தன் நிழல் நிஜமாகி
 கைகள் கோர்த்து ,
உன் தோளில் சாய்ந்திட
வாய்ப்புகளும் ஏதும்  இல்லை ... !!

Tuesday, 19 March 2013

உன் அன்பிற்கான என் பதில் !!!

நீ சேர்க்கும் ஆசைகளில்
என் இதயத்தையும் சேர்க்க நினைப்பாய் ...
நீ பார்க்கும் திசைகளில்
என்  கனவுகளையே  முன் வைப்பாய்...
உன் வாழ்க்கை  பக்கங்களில்
என்னை மட்டும் நிறைக்கின்றாய்...
எனக்கே  தெரியாமல் ,
என்னை  மெல்ல வென்றாய் ...
இந்த  அன்பிற்கு பதில் கேட்டால்
என் இதயம் என்ன சொல்லும்...
இதழ் சிந்தும் புன்னகையை  மீறி
வேறு ஏது பதில் ஆகும்... !!!

Friday, 15 March 2013

உன் சுவாசம் என் வாசமாக..!!!

ஒரு முறை உன் சுவாசம் கலந்து ,
 உன்னுள் சென்று வரவா ...
உன் இதயத்தில் எந்தன் காதலை ,
 கொஞ்சம் சொல்லி வரவா...
உன்  இரத்த துளிகளில் நுழைந்து ,
 சிறு முத்தம் தந்திடவா ...
உன் நரம்பு தூண்களை  பிடித்து ,
 உனக்குள்ளும்  காதல் பூசிடவா ....
என் வழியில் உன் துணை சேர்க்க ,
 ஒரு முறையேனும் பார்வை தந்துவிடு ....!!!

Thursday, 14 March 2013

சாலை நெரிசலில் தொலைத்த இதயம் !!!

என் ஹெல்மெட்டை துளைத்தது
ஒரு பூவின் வாசம் ...
நான்  பார்த்ததும் தெரிந்தது
அது ஒரு பெண்ணின் சுவாசம் ...
அவள் பார்வையில் நொடியினில்
என் இமைகள் உறைந்து போனது..
அந்த கருவிழி ஓட்டத்தில்
என் நரம்பும் சிலிர்த்தது ...
சற்றும் தாமதிக்காமல் சட்டென்று
சரண் புகுந்தது அவளிடம்...
என் இதயம்....
என்னையும்  கேட்காமல் ...!!!

இதய தவிப்பு !!!


உன் விழி பார்த்த காரணத்தால்,
நிலவு வெட்கி உள்  சென்றது...
உன் இதழ் சிந்திய சிரிப்பில்,
கவியும் வார்த்தைகள் கோர்ப்பதை மறந்தான் ...
உன் கால் சுவடை தீண்ட,
கடல் அலையும் போட்டி போடுகின்றது...
உன் கூந்தல் வருடிச் செல்ல, 
தென்றல் காற்றும் தவம் கொள்கின்றது..
ஐயோ !!
அந்த நெற்றி முடியின் ஓரத்தில் ,
என் குட்டி இதயம் தவிக்கின்றதே ... 

Wednesday, 13 March 2013

உனக்கான காத்திருப்பு...!!!


வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
தடயம் சொல்வது உன்  பெயர்  தான்...
போகும் பாதையில் நின்று பார்க்கிறேன்
தடயம் தந்திட உன் கால்கள் இல்லையே...

விண்ணை எட்டி பிடிக்க,
நிலவை கட்டி அணைக்க,
தோழி மட்டும் போதும் -உன் போல்
தோழி மட்டும் போதும்!!

எங்கு சென்று கற்று கொள்வேன்
உன் நினைவுகளை மறப்பதற்கு...
என்னை தழுவும் தென்றல் காற்றும்
உன் நினைவைத்  தானே  தருகின்றது...

ஓடும் நதியில் கால்கள் நனைத்தது,
ஒன்றாய் சேர்ந்து நிலவை ரசித்தது,
பாடல் பாட மெட்டு அமைத்தது,
புது கதை கூறி சிரித்து மகிழ்ந்தது...

சாலை கடக்க பிடித்த கைகள்,
கண்கள் துடைக்க வந்த விரல்கள்,
நம்பிக்கை தந்த அந்த பார்வைகள்,
தைரியம் தந்த சின்ன வார்த்தைகள்...

மறக்கும் நிலையில் எதுவும் இல்லை,
உன்னை கைவிடும் நிலையில் மனமும் இல்லை...
உதிரம் உறையும் நிமிடம் வரையிலும்,
உன் நினைவோடு நிச்சயம் காத்திருப்பேன்...!!

நிலவுக்கு காத்திருக்கும் அல்லியும்,
வார்த்தைக்கு காத்திருக்கும் கவிஞனும்,
விடியலுக்கு காத்திருக்கும் இரவும்,
என்னை போல் காத்திருக்க முடியாது..

வழி மீது விழி வைத்து,
விழியோடு வலி வைத்து,
மீண்டும் கை கோர்க்க வருவாய் என...
உனக்காக காத்து இருக்கின்றேன்....!!!

பெண்மையின் தேடல்..!!!


செவியோரம் வார்த்தைகளை, 
 முதல்முறை தேடுகின்றேன்!!
கூந்தல்நுனி கோதிடவே ,
 விரல்களை தேடுகின்றேன்!! 
விண்மீனின் சிமிட்டலுக்கும்,
 புன்னகை தருகின்றேன் !!
மண்ணோடு பேசிடவே ,
 பழகி பார்க்கின்றேன்!!
விழியோடு சேர்த்துவைக்க 
உன் மனதை தருவாயா ...!!

உலகம் அழியட்டும்!!!


சுவாச காற்றை சூறையாடி 
கூறு போட்டு விற்கும் 
வர்க்கம் உருவாகுமானால் 
இந்த உலகம் நிச்சயம் 
அழிந்தே தீர வேண்டும்...!!!

உலக மகளிர் தின வாழ்த்துகள் !!!!

பூலோகம் நம்மை அறிந்ததும் ,
பூலோகத்தை நாம் அறிந்ததும் ,
தாய்மையின் ஒவ்வொரு அசைவுகளினால் ... 
உலக உருண்டை உறைந்து போகும், 
மகளின் இதழ்கள் சுவடுகள் சேர்க்கையில்...
தோல்விகள் அனைத்தும் துவண்டு நிற்கும்,
தோழியின் கைகள் தோளை தொடுகையில்..
பிரபஞ்சம் வென்ற திமிர் தொற்றிகொள்ளும் ,
காதலியின் விழி சேர்க்கும் நம்பிக்கையில் ..
வாழ்க்கை அர்த்தம் நொடியில் புரியும் ,
மனைவியின் சர்க்கரை மறந்த காபியில் ...
பெண்மையின் பெருமையை விதைத்ததால்,
மண்ணின் பெருமையும் ஓங்கியது...
என் சிந்தனையும் அதிர்ஷ்டம் பெற்றது ,
பெண்மையை போற்ற வார்த்தைகள் கண்டதால் ...!!!