Wednesday, 6 August 2014
Friday, 30 May 2014
தூய்மையின் உச்சம் !!!
தூக்கம் கலைத்தேன் ,
தேகம் சிலிர்த்தேன்,
கன்னம் சிவந்தேன்,
கண்ணீர் மறந்தேன்,
புன்னகை சுமந்தேன்,
மௌனம் ரசித்தேன்,
விண்மீன் பிடித்தேன்,
நெஞ்சம் தொலைத்தேன்,
மேகம் இடித்தேன்,
மழைநீர் ருசித்தேன்,
தனிமை கடந்தேன்,
நேசம் சேர்த்தேன்,
சுற்றம் தவிர்த்தேன்,
தெய்வம் துறந்தேன்,
கவிதை கோர்த்தேன்,
காதலில் கரைந்தேன்,
என்னையும் மறந்தேன்,
தூய்மையை உணர்ந்தேன்,
துணையாய் என்றும்
செவியில் கொஞ்சும்
மந்திர இசையின்
போதையின் உச்சியில் !!!
Saturday, 10 May 2014
நிமிடங்கள் தொலைகிறது!!
வார்த்தை செய்யும் வித்தை,
எல்லாம் மாறி போனது!!
மௌனம் செய்யும் விந்தை,
புதியதாய் சேர்ந்து கொண்டது!!
காற்றோடு நான் பேசி,
புது பாஷை கற்றுகொண்டேன்!!
உன் நினைவில் என் நிழலை,
பார்த்து சிரித்து நின்றேன்!!
நாட்கள் நகர மறுப்பதால்,
நாட்குறிப்பை வெறுத்து விட்டேன்!!
உன் விழியில்,
நான் தொலையும்,
நேரம் வேண்டி நிற்கின்றேன்!!
உன் நினைவில்,
என் நிமிடங்கள்,
மெல்ல மெல்ல தொலைகிறது!!!
Saturday, 3 May 2014
கால்விரல் காதல் !!!
ரத வீதிகள்
ரகம் ரகமாய்
நம் ரகளைகள்
தினம் சொல்லும்
தெருவின் ஓரம்
தேம்பும் சாக்கடையும்
நம்மை குளிப்பாட்டிய
கதை சொல்லும்
நீலநிற உன்னில்
வெள்ளைநிற என் பெயரை
எழுதிய அழகியல்
இன்றும் அழியாமல்
முதல் முதலாக
முளைத்த பஞ்சர்
நம் பந்தத்தின் நடுவில்
தந்தது முதல் கண்ணீர்
அருவை நகர
தெரு எங்கும்
அலுப்பு சொல்லாத
நம் அரங்கேற்றம்
அன்றும் இன்றும்
என்றென்றும்
என் கால்விரல் காதல்
என் சைக்கிள் பெடலோடு !!!
Wednesday, 16 April 2014
போடுங்கம்மா ஓட்டு!!!
ஓட்டு வங்கியாய்
ஊதிய வயிறு
ஓட்டு வாங்கியாய்
சாயம் செத்ததும்
கிழிசல் பூண்டதும்
தட்டு தடுமாறி
வரிசையில் நின்றது
வெள்ளை வேட்டியும்
காட்டன் புடவையும்
வண்ண கொடிகளும்
நகர்வலம் செய்தது
சுப்ரபாதமாய் மாறியது
கட்சி கோஷங்கள்
தாலாட்டாய் மாறியது
கொள்கை பாடல்கள்
திண்ணை சூட்டும்
பேஸ்புக் சுவரும்
தேர்தல் காய்ச்சலில்
அரசியல் பேசுகிறது
சொத்துரிமை ஒதுக்கி
ஓட்டுரிமை நினைத்து
மையினை வைத்து
வாக்கினை சேர்ப்போம்
விரல்நுனி அரசியல்
அனைவரும் செய்வோம்!!!
"போடுங்கம்மா ஓட்டு
கண்ண திறந்து பார்த்து!!!"
Friday, 21 March 2014
கோடுகளுக்கு உயிர் சேர்க்க...!!!
சித்திரம் கற்றேன்
அதையே நகர்த்தி
வார்த்தைகள் சேர்த்தேன்
மொத்தமாய் கோர்த்து
வாக்கியம் பார்த்தேன்
காதலில் விழுந்தேன்
வாசித்த அழகில்
கவிதைகள் செய்தேன்
மொழியின் வழியில்
பார்வைகள் புதிதானது
தமிழின் திசையில்
தாய்முகம் வந்தது
தமிழ் முகம் கேட்டது
தந்தையின் முத்தங்கள்
தமிழ் சத்தம் கேட்டது
தங்கையின் கொஞ்சல்
தமிழ் கெஞ்சி நின்றது
தோழியின் கோபம்
தமிழ் தாபம் தேடியது
காதலன் கரமும்
தமிழ் வரம் கேட்டது
சித்தம் சத்தமாய்
யுத்தம் செய்தது
எந்தன் பெயரை
தமிழின் உளியில்
சின்ன சின்னதாய்
மெல்ல செதுக்கி
கோடுகளுக்கும்
உயிர் கொஞ்சம் சேர்க்க ...!!!
Friday, 14 March 2014
தெய்வீகம் உணர்ந்தேன் உன்னாலே!!
நாடியும் நரம்பும் போரிடும்,
மூளையும் மூச்சை நிறுத்தும்,
நெஞ்சாங்குழி சொல்லி சிலிர்க்கும்,
என் உச்சந்தலை உறையும்,
உன் மெட்டுக்கள் மெல்ல,
என்னுள் மொட்டுகள் விடும் வேளையில் ...
என் புன்னகை சத்தம்,
என் கண்ணீர் யுத்தம்,
என் கனவுகள் மொத்தம்,
உன் ராகத்திலே,
மெல்ல சேர்ந்த வெப்பத்திலே,
கொஞ்சம் கொஞ்சமாய் கொட்டி சேர்ந்திடும்...
என் நாத்திகம் நலிந்து,
கல்லறை பக்கம் சேர்ந்தது,
என் வார்த்தைகள் தீர்ந்து,
பேச்சுகள் செத்து போனது,
முதல் முறையாய்,
சித்தம் நிறைய,
இரத்தம் உறைய,
தெய்வீகம் உணர்ந்தேன் ,
உன் விரல் நாட்டியம் சிந்திய,
இசை முத்தத்திலே!!!
Saturday, 8 March 2014
அவள்!!!
கண்கள் சிமிட்டி கதை சொல்லிட,
தலை கோதி அன்பை சொல்லிட ,
கன்னம் துடைத்து பாசம் செய்திட,
முத்த பதிப்பில் நாட்கள் தொடங்கிட,
கைகள் கோர்த்து காலம் கடந்திட,
பாத சுவட்டில் ஜோடி சேர்த்திட,
காது சூட்டில் ரகசியம் வளர்த்திட,
கண்ணீர் சுவையை கற்று தந்திட,
புன்னகை தேசம் உலகில் சேர்த்திட,
பூமியின் தேவை மனிதம் அறிந்திட,
அண்டம் தாண்டியும் ரசனைகள் சென்றிட,
பூமியின் அளவை சிறிதென உணர்த்திட,
ஒற்றை அணைப்பில் சொர்க்கம் உணர்த்திட,
மனிதம் பெற்ற புனிதம் "அவள் "!!!
கைகள் நடுங்கும் பாட்டியாய் ஒருத்தி!
பிறவி தந்த தாயாய் ஒருத்தி !
கன்னம் கிள்ள அக்காளாய் ஒருத்தி !
தலையை கலைக்க தங்கையாய் ஒருத்தி !
பக்கம் நடக்க தோழியாய் ஒருத்தி !
திசைகள் சொல்லிட காதலியாய் ஒருத்தி !
மனதை படித்திட மனைவியாய் ஒருத்தி !
நித்தம் நித்தம் சித்தம் சுமக்கும்
துளிகள் அனைத்திலும் பெண்மை அடக்கம்!!
கவிதை தொழிலும் முடங்கி இருக்கும்,
கலைகள் அத்தனையும் நலிந்து இருக்கும்,
இந்த காவியத் தன்மை ,
நம் மனிதத்தின் மென்மை ,
பெண்மை இல்லாமல்!!!
Friday, 28 February 2014
நிழலும் கூட வண்ணம் சுமக்கும்
என் கன்னத் தசைகள் வலி சொல்லுதே,
சிரிப்பை சிந்தி அயர்ந்ததினால்..
என் இதழின் ஓரம் விரிகின்றதே,
ஒவ்வொரு வார்த்தையின் முடிவினிலே ..
என் கைபேசியின் சிணுங்கல் சத்தம்,
விடியல் விதையை விதைக்கின்றதே...
என் தாய்மொழி கூட தடுமாறுதே,
நாவினை விட்டு வெளியேற...
என் சுவாச காற்றும் அதிசயமாய்,
ஒற்றை திசையில் நகர்கின்றதே...
என் காலைகள் இங்கு வருவதெல்லாம்,
காலங்களில் அவனை சேர்த்திடவே..
என் இரவுகள் இங்கு கடப்பதெல்லாம்,
கனவுகளில் நினைவை சுமந்திடவே...
என் நிழலும் கூட வண்ணம் சுமக்கும்,
துணையாய் ஒருவன்,
இனி தினமும் என்னுடன்!!!
Saturday, 15 February 2014
Saturday, 25 January 2014
என்றேனும் மாறிடுமா
துள்ளி கொண்டு மண்ணைச் சேர்ந்தாள்
தந்தை கையின் ஒளியின் வழியே
மெல்ல மெல்ல தவழக் கற்றாள்
கையை பிடித்து கதைகள் சொல்ல
மழலை மொழியில் மயக்கம் செய்தாள்
நெஞ்சம் எங்கும் வஞ்சம் இன்றி
கொஞ்சி கொஞ்சி பெண்மை சொல்வாள்
நிறங்கள் அனைத்தையும் தாவணி நுனியில்
பாஷைகள் நூறு பேச வைப்பாள்
என்றும் போல் ஏனோ
அந்த நாளும் இல்லை
வழக்கம் போல நிலவும் உனக்காக
காத்து காத்து களைத்து போனது
காமுகன் கையில்
ஒரு தேவதை கதை
முடியும் விதியை
கனவும் கூட சொல்லவில்லை
நரகன் நகத்தின்
நாச வலையால்
நரகம் சென்றிடவும் துணிந்து பார்த்தாள்
அவதாரம் பத்தும்
அபத்தம் ஆகின ஐந்து நொடியில்
சக்தியெல்லாம் சடலமாய்
மண்டியிட்டது அவள் மடியின் அருகில்
பெண்மை சொன்ன
மண்ணின் ஈரம்
அவள் உதிர வாசம்
சுமந்து உறைந்தது
அவள் கனவுகள் போனது
அவள் இமையோடு
அவள் நினைவுகள் சென்றிடும்
இரண்டு ஆண்டோடு
என்றேனும் மாறிடுமா
எங்கோ ஒரு தேவதை
இன்றும் சிந்தும்
அந்த
இரத்த துளிகளும்
கண்ணீர் வலிகளும்
அவல சத்தமும்????
Thursday, 23 January 2014
Subscribe to:
Posts (Atom)