Saturday, 8 March 2014

அவள்!!!


கண்கள் சிமிட்டி கதை சொல்லிட,
தலை கோதி அன்பை சொல்லிட , 
கன்னம் துடைத்து பாசம் செய்திட,  
முத்த பதிப்பில் நாட்கள்  தொடங்கிட,  
கைகள் கோர்த்து காலம் கடந்திட, 
பாத சுவட்டில் ஜோடி சேர்த்திட, 
காது சூட்டில் ரகசியம் வளர்த்திட, 
கண்ணீர் சுவையை கற்று தந்திட, 
புன்னகை தேசம் உலகில் சேர்த்திட, 
பூமியின் தேவை மனிதம் அறிந்திட, 
அண்டம் தாண்டியும்  ரசனைகள் சென்றிட, 
பூமியின் அளவை சிறிதென உணர்த்திட, 
ஒற்றை அணைப்பில் சொர்க்கம் உணர்த்திட, 
மனிதம் பெற்ற புனிதம் "அவள் "!!!
கைகள் நடுங்கும் பாட்டியாய் ஒருத்தி! 
பிறவி தந்த தாயாய் ஒருத்தி !
கன்னம் கிள்ள அக்காளாய் ஒருத்தி ! 
தலையை கலைக்க தங்கையாய் ஒருத்தி !
பக்கம் நடக்க தோழியாய் ஒருத்தி !
திசைகள் சொல்லிட காதலியாய் ஒருத்தி !
மனதை படித்திட மனைவியாய் ஒருத்தி !
நித்தம் நித்தம் சித்தம் சுமக்கும்  
துளிகள் அனைத்திலும் பெண்மை அடக்கம்!! 
கவிதை தொழிலும் முடங்கி இருக்கும், 
கலைகள் அத்தனையும் நலிந்து இருக்கும்,  
இந்த காவியத் தன்மை ,
நம் மனிதத்தின் மென்மை ,
பெண்மை இல்லாமல்!!!

Friday, 28 February 2014

நிழலும் கூட வண்ணம் சுமக்கும்


என் கன்னத் தசைகள் வலி சொல்லுதே,
சிரிப்பை சிந்தி அயர்ந்ததினால்..
என் இதழின் ஓரம் விரிகின்றதே,
ஒவ்வொரு வார்த்தையின் முடிவினிலே ..
என் கைபேசியின் சிணுங்கல் சத்தம்,
விடியல் விதையை விதைக்கின்றதே...
என் தாய்மொழி கூட தடுமாறுதே,
நாவினை விட்டு வெளியேற...
என் சுவாச காற்றும் அதிசயமாய்,
ஒற்றை திசையில் நகர்கின்றதே...
என் காலைகள் இங்கு வருவதெல்லாம்,
காலங்களில் அவனை சேர்த்திடவே..
என் இரவுகள் இங்கு கடப்பதெல்லாம்,
கனவுகளில் நினைவை சுமந்திடவே...
என் நிழலும் கூட வண்ணம்  சுமக்கும்,
துணையாய் ஒருவன்,
இனி தினமும் என்னுடன்!!!

Saturday, 15 February 2014

வாடை காற்றின் வாச அம்பு !!!


அவள்  நெஞ்சோடு
சிறகு ஒன்று
சேர்ந்திருந்தது ..
அது இன்றோடு
மெல்ல விரிந்து
பறக்க துடித்தது..
காற்றோடு பேசி
காதலும் பூசி
மேகம் கடந்தது...
வாடை காற்றிலே
வந்த அம்பிலே
மோதி நின்றது...
ஒரு தேவதை மகன்
தேடலின் பதில்
அங்கு உதித்தது...
தேடி வந்தவன்
தூக்கி செல்கின்றான்
அம்போடு
அவள் அன்பு நெஞ்சையும்!!! 

Saturday, 25 January 2014

என்றேனும் மாறிடுமா


தாயின் உயிரை உறைய வைத்து 
துள்ளி கொண்டு மண்ணைச் சேர்ந்தாள்  
தந்தை கையின் ஒளியின் வழியே 
மெல்ல மெல்ல தவழக் கற்றாள் 
கையை பிடித்து கதைகள் சொல்ல 
மழலை மொழியில் மயக்கம் செய்தாள் 
நெஞ்சம் எங்கும் வஞ்சம் இன்றி 
கொஞ்சி கொஞ்சி பெண்மை சொல்வாள் 
நிறங்கள் அனைத்தையும் தாவணி நுனியில் 
பாஷைகள் நூறு பேச வைப்பாள் 
என்றும் போல் ஏனோ 
அந்த நாளும் இல்லை  
வழக்கம் போல நிலவும் உனக்காக 
காத்து காத்து களைத்து போனது 
காமுகன் கையில் 
ஒரு தேவதை கதை 
முடியும் விதியை 
கனவும் கூட சொல்லவில்லை 
நரகன் நகத்தின் 
நாச வலையால் 
நரகம் சென்றிடவும் துணிந்து பார்த்தாள் 
அவதாரம் பத்தும் 
அபத்தம் ஆகின ஐந்து நொடியில் 
சக்தியெல்லாம் சடலமாய் 
மண்டியிட்டது அவள் மடியின் அருகில் 
பெண்மை சொன்ன 
மண்ணின் ஈரம் 
அவள் உதிர வாசம் 
சுமந்து உறைந்தது 
அவள் கனவுகள் போனது 
அவள் இமையோடு 
அவள் நினைவுகள் சென்றிடும் 
இரண்டு ஆண்டோடு 
என்றேனும் மாறிடுமா 
எங்கோ ஒரு தேவதை 
இன்றும் சிந்தும் 
அந்த 
இரத்த துளிகளும் 
கண்ணீர் வலிகளும் 
அவல சத்தமும்???? 

Thursday, 23 January 2014

என் காவிய பக்கம் !!!


காலை மாலை 
கடப்பதெல்லாம் 
உன் காதல் வார்த்தை 
கேட்பதினால்... 

நித்தம் இரவை 
கேட்பதெல்லாம்  
உன் நினைவில் நிமிடம்  
கடந்திடவே... 

அலைகள் பேசும் 
ரகசியங்களும்  
நீ பக்கம் நின்றால் 
மௌனங்களே .... 

சாலைகள் தூவும் 
தூசிகளும் 
உன் தோளின் பக்கம் 
சாமரமே... 

உலகம் உடையும் 
நிமிடத்திலும் 
உன் கைகள் கோர்த்தால் 
காவியமே... 

Thursday, 19 December 2013

என்னை போல் தானே நீயும்!!!


என்னை போலவே,
எண்ணம் சுமந்து ,
மண்ணில் அவளும், 
பிறந்திருப்பாள் !!

கயவன் ஒருவன், 
கலைத்த கனவினில், 
கலைந்து கிடந்தாள், 
சாலையோரம்!! 

கடந்து சென்றது, 
கட கடவென பேருந்துகள் ,
மட மடவென மனிதர்கள் ,
வேகம் குறையாமல் !!

தீண்டிய பார்வைகள் ,
திட்டி தீர்த்தது கொஞ்சம், 
பாவம் என்றது மிச்சம் ,
பாசம் தாராமல் !!

மூடன் ஒருவன் ,
மீண்டும் தீண்ட ,
அஞ்சி நடுங்கிய கண்கள் ,
இன்றும் கண்ணில் !!

இருபது ரூபாயை ,
இறுக்க கையில் திணித்து ,
காப்பாற்று என்ற கண்கள் ,
இன்றும் நெஞ்சில் !!

போர்வை போர்த்தி,
பத்திரம் செய்து ,
வழியனுப்பிய பின்னும் ,
இன்றும் மனதில் நீ !!

என்னை போலவே ,
எண்ணம் சுமந்து ,
கனவு கோட்டை ,
நீயும் செய்து இருப்பாயே  பெண்ணே !!!

Wednesday, 11 December 2013

என்னவன் பாரதி!!



தாலாட்டு அறிந்தேன்
உன் கண்ணம்மாவை
என் அம்மா சொன்னதால்!!

அச்சம்  தவிர்த்தேன்
உச்சி தொட்டு
என் தந்தை உன்னை சொன்னதால்!!

தேசியம் அறிந்தேன்
உன் "எந்தையும் தாயும்"
என் சிந்தையில் நின்றதால்!!

கனவுகள் சுமந்தேன்
"வானகம் இங்கு தென்பட"
எண்ணம் நீ தந்ததால்!!

கர்வம் சுமந்தேன்
உன் "புதுமை பெண் "
எனக்கு முன்மாதிரி ஆனதால்!!


கவிதை சேர்த்தேன்
உன் வார்த்தை கைகள்
என் விரல் பிடித்ததால்!!

தலையணை  பக்கம்
உன் பக்கங்கள் சொல்லும்
சொற்கள் எனக்கு சுகமாகும்!!

வேடிக்கை மனிதரின்
வாடிக்கை உலகில்
தேடி எனக்கு மாயம் செய்தாய்!!

எனக்குள் நிறைந்த
என் ஆத்ம நண்பன் ஒருவன் !!
என்னவன் பாரதி!!