Thursday, 24 October 2013

உன்னதமொன்று உதிர்த்தேன்!!


நித்தம் நித்தம்
நின்னை நானே
நேசிக்கின்றேன்  
நிஜமாய் தானே!!

சத்தம் சபலம்
சலனம் சற்றும்
சிந்தாமலே
சிதறிச் சேர்ந்தேன்!!

பட்டம் பக்கம்
பூக்கள் போல
பஞ்சமின்றி
பூத்து நின்றேன் !!

கட்டம் கட்டி
கனவு கதவை
கட்டிப்போட்டும்
கண்ணுக்குள் வந்தாய்!!

வதன வெட்கம்
விதியின் வழியில்
விதைத்துபோக
விழியில் சேர்ந்தாய்!!

அரவமில்லா அகரம்
அங்குமிங்கும் அசையும்
அகத்தினுள்ளே
அத்தனையும்  கண்டுவிடு!!

உனக்கே உனக்காக
உள்ளத்தின் உள்ளே
உன்னதமொன்று
உதிர்த்தேன் - உணர்ந்துவிடு !!   

Tuesday, 22 October 2013

பருவ மழை!!


மொத்தமாய் திருட ...
சித்தத்தை வருட....
கண்ணுக்குள் மறைய..
கன்னத்தில் கரைய..
மேகமாய் திரள..
மேனியில் உருள..
வெப்பங்கள் அடங்க...
சிலிர்ப்புகள் தொடங்க...
என் ஆடையாய் மாற...
என் வாடையில் சேர...
சின்னதாய் பிணைய...
செல்லமாய் இணைய...
மிச்சம் இல்லாமல்...
மோட்சம் கொண்டிட...
என்னிடம் வந்துவிட்டான்...
வடகிழக்கு கள்வன்!!!


Saturday, 12 October 2013

இசை உலகம்!!!


பிறப்போடு பிறக்கும் அதிசயம்!!
இறப்பிலும் பிரியா ரகசியம் !
சத்த கவிதைகளாய் ,
நித்தம் வருடும் !
பேசும் நிழல்களாய்,
பக்கம் நடைபயிலும்!
காலை நேர இரவுகளை, 
ராகம் சேர்க்கும் என்னிடம்!
இரவின் காலை பக்கங்கள்,
மெட்டுகளில் மொட்டு விடும்!
செவிகள் உணரும் நேரம்,
இதயம் மெல்ல உருகும் !
நரம்பின் மூலை முடுக்கும்,
புது மொழி ஒன்று சுமக்கும்!
என் சிரிப்பின் பின்னே,
மறைந்து இருக்கும்!
என் கண்ணீர் மறைக்க,
துணை இருக்கும்!
தனிமை சுகங்கள்
அந்த உலகில் இல்லை!
அவை  இல்லா உலகம்
எனக்கும் தேவை இல்லை!
உன்னுள்ளும் தோன்றும்,
என்னுள்ளும்  தோன்றும் ,
உனக்காகவும் பிறக்கும் ,
எனக்காகவும் பிறக்கும் ,
உலகம் சுமக்கும் ஒரு
பொது உடைமை!
எல்லைகள் கடந்த அந்த
இசை வலிமை!
இசை இல்லா விடியல்கள்
கண்டதில்லை இதுவரையில்!!
இசை இல்லா இரவுகளும்
கடந்ததில்லை இன்றுவரையில் !!
இசை இல்லா
ஓர் உலகம்?
கனவிலும் வேண்டாம்
ஒரு பொழுதும்!!!


Saturday, 5 October 2013

புத்தகம் என்னும் வித்தகன்!!!


மொத்த வாசனை முகர்ந்து,
 முத்த தழுவலில் ஆரம்பிக்கும்!!
பித்தம்  உச்சிவரை ஏறும்,
 முதல் பக்கம் திருப்பும்போது!!
எழுத்தின் நடுவில் புகுந்து,
 கட்டி அணைக்க தோன்றும்!!
வார்த்தை விரிப்பில் ஏறி,
 உலகை ஆள  முயலும்!!
கதையின் உள்ளே சென்று,
 காட்சி மாற்ற திணறும்!!
கனவிலும் மிதந்து வாழ,
 ஒரு புதுக்கதை விட்டுச்செல்லும்!!
வாட்டர்லூ போரின் விளிம்பில்,
 நெப்போலியன் வீரியம் அறியலாம்!!
வாதாபி கடவுளின் தந்தம்,
 தொலைந்த இடத்தையும் காணலாம்!!
காதல் ரோமியோ கண்முன்னே,
 ஜூலியட் தூக்கி செல்வானே !!
பாலை வனத்தின் பாதைகளையும், 
 அத்துபிடி ஆக்கி செல்லுமே!!
தேடி திரியும் நாட்களுக்கு,  
 பதில்கள் ஆயிரம் தந்துவிடும்!!
தனிமை தழுவும் வேளையிலும்,
 என்னை தழுவி மாயம்செய்யும் !!
அஃறினை நண்பன் அவன்!!
 தொற்றிகொள்ளும் காதலன் அவன்!!
பக்கங்கள் என்னும் சதை சுமந்து,
 புத்தக வடிவில் உலகை ஆள்பவன் !!
குட்டென்பெர்க்கின் மூளை குழந்தை,
 உலகம் சுமக்கும் பேதை குழந்தை!!
மறுஜென்மம் உண்மை என்றேன்
 ஒவ்வொறு புத்தகத்தின் முடிவிலும்!!
கோடி பிறவிகள் நிச்சயம் சாத்தியம்
 புத்தகம் பக்கம் நம் பக்கங்கள் சென்றால்!!