Monday, 26 August 2013

கற்கண்டு கண்ணீர் காலங்கள் !!!

கனவுகள் தந்திடும் சுகங்களிலே
மெல்ல பிறந்திடும் விழி நீரே!!
என் திசைகளில் எங்கும் நீ இருந்தால்
ஆனந்தம் ஆகிடும் என் ஆயுளே !!

கதைகளை செவிகளில் சேர்த்தப்பின்னே,
தேவதை உறங்கும் அழகினிலே,
தாயின் தாளக்  கொட்டாவி
சிந்தும் கண்ணீர் ராகங்களை!!

பட்டுப் புடவை மடிப்புகளை,
மெல்ல மெல்ல சரிசெய்து,
தந்தை முகம் பார்க்கையில்,
விழி வழி பதிலாய் துளி வந்து சேரும்!!!

தயங்கி தயங்கி விழி பார்த்து,
தயக்கம் மறந்து இதழ் சேர்க்கும்,
முதல் முத்தத்தின் முடிவில் ,
முகம்சேரும் அழகிய கண்ணீர் துளி !!

வலிகள் தீர்க்கும் விரல்களின் நடுவில்,
தாடை பதித்து இதழ்கள் விரித்து ,
புருவம் சுருக்கி சுவாசம் நீளும்,
நொடிகளின் முடிவிலும் சிறு துளி வரும்!!

சுகங்களின் சுமைகள் நீளும் வேளையில்,
நெஞ்சின் முடிப்புகள் துடிக்கும் ஓசையில்,
சின்ன சின்னதாய் கண்களில் சிலிர்க்கும்,
மனிதம் விரும்பும் ஆனந்த கண்ணீர் !!

Thursday, 22 August 2013

என்னவனே...!!!


என் கன்னக்குழி நடுவினில்
 காதல் நிறைத்தாய்!!
என் வளையலின் நுனியினில்
 முத்தம் பதித்தாய்!!
என் விரல்களின் எண்ணிக்கை
 உன் விரல்களே அறியும்!!
என் காதலின் வண்ணங்கள்
 உன் கருவிழி அறியும்!!
உன் சட்டைக்கையின்  நுனியினில்
என் கட்டைவிரல் காதல்செய்யும்!!
உன் தோள்களின் கேள்விக்கு
 என் கூந்தல்நுனி கதை தரும் !!
நம் விழிகள் பேசும் வேளையினில்
 என் இதயம் உறைவதை உணர்கின்றேன்!!
நீ நகரும் ஒவ்வொரு நொடியினிலும்
 உன்னுடன் வரவே துடிக்கின்றேன்!!
தினம் தினம் உந்தன் பார்வையினாலே
 ஏக்கங்கள் கோடி  தருகின்றாய்!!
நொடிகள்  ஒன்றையும் தவற விடாமல்
 வியப்புகள் ஆயிரம் சேர்க்கின்றாய் !!
எனக்கே எனக்கானவனே....
உன்னில் என்னை சேர்த்துவிடு !!
 என் இதய துடிப்பையும் திருடிவிடு !! 

Tuesday, 20 August 2013

அன்பு உயிர் பெறும் போது!!!


உயிர் உருக்கி பாசம் தருவான்
இரத்த நாளங்களில் தேன் சுமப்பான்
தலை சாய்க்க இடம் தருவான்
திசை காட்ட விரல் பிடிப்பான்

நான் பேசும் மொழிகள்  எல்லாம்
அவன் சொன்ன வார்த்தைகளை சுமக்கும்
இலக்கணங்கள் யாவும் சொல்லி தந்தான்
கண்ணீரின் அர்த்தத்தை மறைத்து வைத்தான்

வானம் என்று நான் சொன்னால்
வானவில்லால் பாதை அமைப்பான்
தாகம் என்று இமைகள் அசைந்தால்
அவன் ஜீவனும் முந்திவரும்

கையில் வந்த தேவதை  என்று
பொய்கள் பூசி பாசம் நெய்திடுவான்
நான் கொடுக்கும் சுடு நீரும்
சபாஷ் ரசம் ஆகும் அவனிடத்தில்

கம்பன் மீண்டும் பிறந்தாலும்
மொழிகள் புதிதாய் படைத்தாலும்
இந்த உறவின் அழகு புரியாது
இந்த அன்பின் இணைப்பும் தெரியாது
அண்ணன்களும் -தங்கைகளும் !!! 

Thursday, 8 August 2013

என் உயிர் தோல்வியே!!


இரவுகளின் தோல்விகளை
 விடியல்களாய் காண்கின்றோம்!!
நிலவொளியின் தோல்வியினை
 ஆதவனில் பார்க்கின்றோம் !!
அலைகளின் தோல்வி படலங்களே
 கடற்கரை அழகாய் மாறியதே!!
தோல்வியின் சவுக்கடி சுமைகள்
 வெற்றியின் முத்தங்களை சுமந்திடவே!!
தோல்விக்கும் பதில்கள் தந்துவிடு
  முயற்சியை  பரிசாய் மாற்றிவிடு !!
வீழ்ந்திட எதற்கு மனித அவதாரம்
 வாழ்ந்திடவே  கொண்டோம்  வலிமையினை !!
தோல்விகள் எல்லாம் தோல்விகள் இல்லை
 உன் முயற்சிகள் கல்லறை சேரும்வரை !!
வெற்றிகள் எல்லாம் இனிப்பதும் இல்லை
 தோல்வியின் சுவையை கடக்கும் வரை !!
கண்ணீர்களும் அர்த்தங்கள் சுமக்கும்
 தோல்வி விதைகள் வெற்றி மரமானால் !!
சரிதைகளும் உன் பெயர் சொல்லும்
 தோல்விகள் உன் வாழ்க்கைக்கு உரமானால் !!

Thursday, 1 August 2013

நட்சத்திர பாவை !!!


தேவதையாய் மண்ணில் வந்தாய்
நட்சத்திரங்களை கண்களாய் சுமந்து வந்தாய்
உன் சின்ன கால்கள் என் கைகளை தொட்டதும்
உன் பிஞ்சு விரல்கள் என் கன்னம் தொட்டதும்
இன்னும் அழியா  வியப்பாய் !!
பிரார்த்தனைகளில் நம்பிக்கை கொண்டேன்
எங்கள் பிரார்த்தனைகளின் பலனாய் 
நீ நம் வீட்டை சேர்ந்ததால்!!
உன் காலை விடியல் அட்டகாசங்கள்,
நம் வீட்டின் வானவில் பக்கங்கள்!!
உன் மாலை நேர திருவிளையாடல்கள்,
நம் வீட்டில் சேர்க்கும் சிரிப்பு சப்தங்கள்!!
"ச்சீ  போ " என்ற சண்டை நிமிடங்களும்,
"அக்கா " என்னும்  பாச பிணைப்புகளும்,
கிள்ளி வைத்து ஓடி ஒளியும் கள்ளத்தனமும்,
தூக்கத்தில் கட்டி அணைத்து தூங்கும் மனமும்,
என் மீது நீ கொண்ட பாசம் சொல்லும்!!
உன் மீது நான் வைத்த நேசம் சொல்லும்!!
நமக்குள்ளும் ரகசியங்கள் உண்டு !!
ரகசியங்களை உடைக்கும் நிமிடங்களும் உண்டு !!
நான் செய்யும் கருகிய தோசையும்,
உன் நாவை சேரும் சந்தோசமாய் !!
சுகங்கள் தரும் என் சின்ன தேவதையே!!
என் பக்கங்களை நிரப்பும் சித்திரமே !!
உன் தலை கோதிட என் கைகள் உண்டு !!
உன் கன்னங்களுக்கு என் முத்தங்கள் உண்டு!!
அன்புள்ள தங்கையே!!
முதல் முறை என் பாசம் எழுத்துகளாய்!!
உனக்கே உனக்காக மட்டும்!!!