Tuesday, 30 April 2013

புத்தம் புது சுவாசம் !!!




ஓராயிரம் பரிமாற்றங்கள் பார்வைகளில்
 ஒரு கோடி புன்னகைகள் இதழோரத்தில்
தடுமாற்றங்கள் பல கடந்தபின்
 அறிமுகம் ஆனோம் அலைபேசியில்
குறுஞ்செய்தியில் விதை விதைத்தோம்
 குரல் வழியே நட்பை செய்தோம்
கதைகள் பல ஒன்றாய்  நெய்தோம்
 கவிதைகளை இணைந்தே ரசித்தோம்
என் ஆசைகளை அவனே அறிவான்
 அவன் பதில்களை நானே சொல்வேன்
ஒரு வியாழனின் அதிகாலையில்
  காதல் சொல்லி  சிலிர்க்க செய்தான்
என் கூந்தலை அவன் கைகளால்
 கோதிடவே ஆசை கொண்டான்
என் விரலோடு விரல் சேர்த்து
  உயிர் வாழ்ந்திட  கனவு  செய்தான்
எனக்காகவே அவன் பாதையில்
 புது திசையினை தீட்டி வைத்தான்
அவன் விருப்பங்கள் முழுதாய் அறிவேன்
 அவன் செயல்களின் அர்த்தமும் அறிவேன்
பதில் ஏதுமே எதிர்பாராமல்
 பயணம்  செய்கின்றான் என் வாழ்வில்
ஏங்கி ஏங்கி சேர்க்கின்றேன்
 அவன் பக்கங்களை என்  வாழ்க்கையில்
ரசிக்கின்றேன் !!
வியப்புகள் சேர்க்கின்றேன் !!
புதிர் செய்கின்றேன் !!
புதிதான பதிலைத் தேடி திரிகின்றேன் !!! 

Wednesday, 24 April 2013

யார் மனிதன் ?


தமிழை கற்று உலகம் அறிந்ததால்
தமிழன் என்று பெயரிட்டார்கள் !!
விந்தியம் கடந்த காற்றை சுவாசித்ததால்
இந்தியன் நீ என்று சொல்லி சென்றார்கள் !!
மனிதனை மனிதனாய் மட்டும் அங்கீகரிக்கும் 
மண்ணின் தேடல் மனிதத்தை தந்திடுமா ...
எனக்கு  கல்லறை செய்தால்  எழுதிடுங்கள் !!
எனக்கென இந்த உலகம் தந்த  பெயரை அல்ல !!
"இது ஒரு மனிதனின் கல்லறை " என்று ...!!




Monday, 22 April 2013

கலங்காதிரு மனமே!!!

கலங்காது இருந்திடு என் மனமே!
கரையாது இருந்திடு என் குணமே!
போற்றுவார் போற்றலில்  மயங்காதே !
தூற்றுவார் தூற்றலை ஏற்காதே !
உன் பாதையில்  நீ நடந்திடு !
உன் பயணத்தை இன்றே தொடங்கிவிடு !
பாதையில் முட்களை நீ கண்டால்
உன் முயற்சியை சற்றே முடுக்கி விடு !
பயணத்தில் கற்கள் விழுந்து விட்டால்
உன் கனவினை கூர்மை செய்துவிடு !
தடைகள் இல்லா தடயம் ஒன்றை
உலகில் விட்டு விட்டு செல்லாதே !
துயரம் காணாத வெற்றியை என்றும்
உன் சந்ததிக்கு சரித்திரம் சொல்லாதே !
பிறப்பினை கொண்டாடும் சரித்திரம் செய்யாதே !
இறப்பினை கொண்டாடும் விசித்திரம் செய்யாதே!
உன் வாழ்க்கையை கொண்டாட
பக்கங்கள் செய்து மண்ணுக்கு பரிசளித்திடு!!!



Friday, 12 April 2013

காதல் நேரம்!!!


விழியின்  ஓரம்  வழிந்து  ஓடும் மையினை
 உன் விரல் மெல்ல  தீண்டியே  முத்தம் சேர்க்கும் ...
எந்தன் நெற்றி குங்குமம் உன் நெற்றி  சேர்ந்திடும்
 அந்த இன்ப நொடி நாடியை உறைய வைக்கும் ...
புரியாமலே புதிராகவே உன் கைவிரல்  என் கையுடன்...
 என் ரேகையும் உன் பக்கமே தினம் நீள்கின்றதே...
அறியாமலே விழி பேசுமே ஓராயிரம் அர்த்தங்களை
 வெட்கங்களின் பரிமாற்றமும் அரங்கேறிடும் மெதுவாகவே ...
நம்  காதலை நாம் சொல்லிட பாஷைகளே தேவையில்லை
உன் விழியின் வார்த்தைகளை  நான்  அறிவேன் ..
என்  வெட்கங்களின்  பதிலையும்  நீ மட்டுமே  அறிவாய் ..!!!


Wednesday, 3 April 2013

என் நட்பின் பக்கங்கள்... !!!!

காலை காபியில் தேநீரையும்  கலந்து
 விடியலை  தொடங்கிய விடுதி  நாட்கள் ...
அரைமணி  நேர வரிசைக்கு  பரிசாய்
 கிடைத்த மொறு மொறு தோசை...
ஒரு தடவை கண் அடித்து விட்டு
 தோசையை இரணகளம் செய்யும் கைகள் ...
ஒரு வழியாக யுத்தங்கள் வென்று
 கல்லூரிக்கு கிளம்பும்  படை  ஒன்று ...
இறுதி  டச்-அப்  செய்யும்  தோழி  ஒருத்தி ...
 தன் மனதை கவர்ந்தவனை  தேடும்  இன்னொருத்தி ...
புத்தகங்களுடன் பேசி வரும் மற்றும் ஒருத்தி ...
 வானம் பார்த்து கவிதை சொல்லி நச்சரிக்கும்  ஒருத்தி ...
ஜோக் என்ற பெயரில் உயிர் எடுக்கும் ஒருத்தி ...
 இந்த பன்முக கூட்டம் நிச்சயம்  வகுப்பையும்  அடையும்...
தினமும் நடக்கும் கச்சேரியும் ஸ்ருதி தப்பாமல்
 வகுப்பில் அழகாய் அரங்கு ஏறிடும் ...
மீண்டும் விடுதிக்கு படை எடுக்கும்போது
 தடுக்கி விழும் படலம் நிகழும் ஒருத்திக்கு...
ஐந்து நிமிடம் சிரிப்பு எழுப்பி
 மொத்த ஊரின் கவனம் ஈர்ப்போம் முதலில் ...
அடுத்த நொடியில் அழகாய் நிகழும்
' தோள் கொடுப்பாள் தோழி'  படலம் ...
மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டே
 விடுதியை அடையும் அந்த ஊர்வன கூட்டம் ...
இரவு மெனுவில்  நூடுல்ஸ் கண்டதும்
 பந்திக்கு முந்தும் அத்தனை கால்களும் ...
நூடுல்ஸோடு தயிரை  கலக்கும்  புரட்சியும்  நடக்கும் ...
 முல்தானி மெட்டியை நாடும்  முகங்களும் மலரும் ...
நட்பின் பக்கங்களை பதிய நினைத்தால்
 என் வாழ்நாளும் போதாது ...
நான் அறிந்த வார்த்தைகளும்  போதாது...!!!