Friday, 21 March 2014

கோடுகளுக்கு உயிர் சேர்க்க...!!!


அகரம் தீட்டி 
சித்திரம் கற்றேன் 
அதையே நகர்த்தி  
வார்த்தைகள் சேர்த்தேன் 
மொத்தமாய் கோர்த்து 
வாக்கியம் பார்த்தேன் 
காதலில் விழுந்தேன் 
வாசித்த அழகில் 
கவிதைகள் செய்தேன்  
மொழியின் வழியில் 
பார்வைகள் புதிதானது 
தமிழின் திசையில் 
தாய்முகம்  வந்தது 
தமிழ் முகம் கேட்டது 
தந்தையின் முத்தங்கள் 
தமிழ் சத்தம் கேட்டது 
தங்கையின் கொஞ்சல் 
தமிழ் கெஞ்சி நின்றது 
தோழியின் கோபம் 
தமிழ் தாபம் தேடியது 
காதலன் கரமும் 
தமிழ் வரம் கேட்டது 
சித்தம் சத்தமாய் 
யுத்தம் செய்தது 
எந்தன் பெயரை 
தமிழின் உளியில் 
சின்ன சின்னதாய் 
மெல்ல செதுக்கி 
கோடுகளுக்கும்  
உயிர் கொஞ்சம் சேர்க்க ...!!! 

Friday, 14 March 2014

தெய்வீகம் உணர்ந்தேன் உன்னாலே!!


நாடியும் நரம்பும் போரிடும்,
மூளையும் மூச்சை நிறுத்தும்,
நெஞ்சாங்குழி சொல்லி சிலிர்க்கும்,
என் உச்சந்தலை உறையும்,
உன் மெட்டுக்கள் மெல்ல,
என்னுள் மொட்டுகள் விடும் வேளையில் ...

என் புன்னகை சத்தம்,
என் கண்ணீர் யுத்தம்,
என் கனவுகள் மொத்தம்,
உன் ராகத்திலே,
மெல்ல சேர்ந்த வெப்பத்திலே,
கொஞ்சம் கொஞ்சமாய் கொட்டி சேர்ந்திடும்...

என் நாத்திகம் நலிந்து,
கல்லறை பக்கம் சேர்ந்தது,
என் வார்த்தைகள் தீர்ந்து,
பேச்சுகள் செத்து போனது,
முதல் முறையாய்,
சித்தம் நிறைய,
இரத்தம் உறைய,
தெய்வீகம் உணர்ந்தேன் ,
உன் விரல் நாட்டியம் சிந்திய,
இசை முத்தத்திலே!!!

Saturday, 8 March 2014

அவள்!!!


கண்கள் சிமிட்டி கதை சொல்லிட,
தலை கோதி அன்பை சொல்லிட , 
கன்னம் துடைத்து பாசம் செய்திட,  
முத்த பதிப்பில் நாட்கள்  தொடங்கிட,  
கைகள் கோர்த்து காலம் கடந்திட, 
பாத சுவட்டில் ஜோடி சேர்த்திட, 
காது சூட்டில் ரகசியம் வளர்த்திட, 
கண்ணீர் சுவையை கற்று தந்திட, 
புன்னகை தேசம் உலகில் சேர்த்திட, 
பூமியின் தேவை மனிதம் அறிந்திட, 
அண்டம் தாண்டியும்  ரசனைகள் சென்றிட, 
பூமியின் அளவை சிறிதென உணர்த்திட, 
ஒற்றை அணைப்பில் சொர்க்கம் உணர்த்திட, 
மனிதம் பெற்ற புனிதம் "அவள் "!!!
கைகள் நடுங்கும் பாட்டியாய் ஒருத்தி! 
பிறவி தந்த தாயாய் ஒருத்தி !
கன்னம் கிள்ள அக்காளாய் ஒருத்தி ! 
தலையை கலைக்க தங்கையாய் ஒருத்தி !
பக்கம் நடக்க தோழியாய் ஒருத்தி !
திசைகள் சொல்லிட காதலியாய் ஒருத்தி !
மனதை படித்திட மனைவியாய் ஒருத்தி !
நித்தம் நித்தம் சித்தம் சுமக்கும்  
துளிகள் அனைத்திலும் பெண்மை அடக்கம்!! 
கவிதை தொழிலும் முடங்கி இருக்கும், 
கலைகள் அத்தனையும் நலிந்து இருக்கும்,  
இந்த காவியத் தன்மை ,
நம் மனிதத்தின் மென்மை ,
பெண்மை இல்லாமல்!!!