Saturday, 27 July 2013

காதல் சொல்லடி தோழியே!!!


என் வாழ்வின் கிழக்கு திசையினிலே
எனக்கான விடியலாய் வந்தவளே !!
என் இரத்த துளிகளின் இடையினிலே
அன்பின் சாயம் தந்தவளே !
தோழியே ! என் தோழியே !
கரைகின்றேன் உன் அன்பின் வெப்பத்திலே !
உன் இமைகளின் ஓரம் வழிந்திடும் கண்ணீர்
என் தோள்களை சேர்ந்திட காத்து நிற்கின்றேன்!!
உன் கருவிழி ஓட்டம் என் இமைகளை சேர
என் ஏக்கங்கள் சுமந்து சுவாசம் செய்கின்றேன்!
என் இதயத்தின் துடிப்பின் அர்த்தங்கள் அறிந்தவளே !
உன் பார்வையின் சுகங்களை என் வாழ்விற்கு அளிப்பாயா?
என் பிறவியின் அர்த்தம் நீ தான் பெண்ணே !
என்னையும் கவிதை செய்வாயா..?
உன் கண்கள் சிமிட்டும் இசை மொழியால்
என் பாதைக்கு வர்ணங்கள் சேர்ப்பாயா?
என் பாதங்கள் உன்னை நோக்கியே !
ஒரு முறை உன் நெஞ்சுக்குள் அழைப்பாயா?
உன் புன்னகை தீண்டல் போதுமடி!!
என் ஜென்மங்கள் ஏழும் சொர்க்கமடி!!    

Tuesday, 16 July 2013

கரைகின்றேன் மெல்ல!!!


அந்தி வேளையின் ஆகாய மேகங்களில்
என் நெஞ்சை செலுத்தி பார்க்கின்றேன்..
மேகங்களின் தேவதை என் மனதை திருடி,
உன் முகத்தை பரிசாய் அளித்தது...
என் கள்ளத்தனம் வெளிப்பட்டதால்,
பார்வை விலக்கி தேநீர் கோப்பையில் செலுத்தினேன்..
என் தேநீர் கோப்பை  மஞ்சள் பொம்மை,
என்னை நோக்கி கண் அடிக்கின்றதே..
என் முகம் கூட உன் முகமாய்
காட்டி சிரிக்கின்றது என் வீட்டு கண்ணாடி...
உன் கள்ளத்தனம் செய்யும் கண்ணில் விழுந்தேனோ ?
உன் உள்ளம் உணர்த்திய அன்பில் கரைந்தேனோ ?
முதல் முறையாய் உணர்கின்றது என்  சுவாசம்
ஒரு ஆணின் வாசம் என்னுள் கலப்பதை..!! 

Friday, 12 July 2013

அ..ப்...பா...!!!


மண்ணில் வந்த நொடி முதலாய் என்னை
கண்ணில் சுமக்கும் ஆண் மகனே !!
தேவதை என்றே என்னை அறிமுகம் செய்வாய்!!
உன் ராணி என்றே என்னை வளர செய்தாய் !!
பள்ளி செல்லும் அவசர  நாளிலும்,
நமக்குள் உண்டு விளையாட்டு !!
உன் தோளில் கால்கள் பதித்திடுவேன்..
சிரித்து கொண்டே காலணி அணிவிப்பாய் !!
உன் விரல்கள் பிடித்து ஆடிய நடனங்கள்,
அதுவே என் உலகை அழகாக்கும் நினைவுகள் !!!
உந்தன் மீது கால்கள் போட்டு தூங்கிய நாட்கள் ,
அதுவே என் வாழ்வின் சொர்க்கம் தொட்ட  பக்கங்கள் !!
என் இதழ்கள் பேசும் முன்னே,
என் ஆசைகள் அறியும் உன் கண்ணே !!
என் கண்ணில் ஈரம் கண்டால்,
இந்த உலகே உனக்கு பாரமே !!
அப்பா என்று ஆயிரம் முறை அழைத்தாலும்,
கண்ணே என்று மட்டுமே உன் குரல் என்னை அழைக்கும்!!
இருபது முறை ஆடை மாற்றி வந்தாலும்,
சிரிப்புடன் உண்மைகள் சொல்வது தந்தை உள்ளம் மட்டுமே !!
என் பக்கங்களின் முதல் ஆர்வலனே !
என் சத்தங்களின் முதல் ரசிகனும் நீயே !!
அந்த அன்பு  அணைப்புகளும்,
என் நெற்றி சுமக்கும் உன் முத்தங்களும்,
சின்ன இமை அசைவும் போதுமே !!
மொத்த உலகையும்  சட்டென்று வென்று வர!!!
மகள்கள் மட்டுமே அறிய முடியும்
அப்பா என்ற உச்சரிப்பு தரும் சுகங்களை !!!


Wednesday, 10 July 2013

என் நண்பன்!!


தன் பாதங்களின் பயண பதிப்புகளில்,
தன் நட்புகளின் பக்கங்கள் சேர்ப்பவன்..
ஒரு அடி நடந்திடும் வேளையில்,
ஓராயிரம் திட்டங்கள் தீட்டுவான்..
மழைத்துளி விரல்நகம் தீண்டும் சத்தத்தில் ,
இசைமொழி காணும் ரசிகன் அவன்..
புத்தகங்களின் பக்கங்களில் உயிர் காண்பவன்..
பக்கம் தவறாமல் எழுத்துகளுடன் காதல் கொள்பவன் ..
தூக்கத்தின் நடுவிலும் விழித்திருப்பான் ..
தூரத்து தோழர்களை நினைவில் சுமப்பான் ..
நம் நடுநிசி அழைப்புகளும்,
புன்னகை பதிலை பெற்றிடும் அவனிடம்..
நம் கிறுக்கல்களும் புலம்பல்களும் கூட,
கவிதை என்றே  அவன் அரங்கேற்றுவான் ...
பாரதியின் பக்கம் சொன்ன தைரியங்களும் 
இவன் நட்பின் உலகில் உணர்ந்திடலாம் ..
என்றும் என்றென்றும்,
அவன் அன்பின் மேகம் நம்மை சூழ
ஏக்கம் தரும் ஜீவன் அவன் - என் நண்பன்!!!