Friday, 29 November 2013

மிச்சம் பிடித்தவை !!!


அரை ஜான் வயிற்றை,
அடக்கி படைத்திருந்தால்,
அண்டம் தேடி இருக்காது,
ஆண்டவனையும்,
அணு குண்டையும்!!

நாக்கின் நீளம்,
நடுவில் நின்றிருந்தால், 
நானிலம் நாடி இருக்காது,
நாகரிகங்களையும்,
நாடு தேசங்களையும்!!

அறிவின் ஆழம்,
அமுக்க பட்டிருந்தால்,
அகிலம் அமைத்து இருக்காது ,
அரசியலையும்,
அரசாங்கத்தையும்!!

மூடர் மண்ணின்,
மூலை முடுக்கில்,
மூளை முழுக்க செலுத்திவிட்டோம்,
முழுமை இழந்து,
முதுமை மட்டும்,
மிச்சம் பிடித்தோம்!!  

Friday, 22 November 2013

வேடிக்கை மனிதர்கள்


அண்டம் கண்ட அந்நியர் !
அண்டம் தின்றே வளர்ந்திடுவார் !!
காற்று தந்த மண்டலமும்,
கரியாய் மாறி கரைசேரும்!!
அரைஜான் உறுப்பின் வாதத்திற்கு,
அத்தனை உயிரிலும் பதில்தேடும் !!
தண்ணீர் தந்த பூமிக்கே,
தாகம் சேர்த்து சென்றிடுவார்!! 
வாழ்க்கை தந்த காடுகளின்,
வாழும் வழியை விழுங்கிடுவார்!!
கண்ணில் காணும் குப்பையிலும்,
காகித வர்த்தகம் செய்திடுவார்!! 
மண்ணின் கடைசி துகளிலும்,
மாடி ஒன்று சேர்த்திடுவார்!!
கடைசி இலையின் நுனியினிலும்
கட்டம் கட்டி ஆராய்ந்திடுவார்!!
வேடிக்கை மனிதனின்,
வாடிக்கை உலகில்,
உயிர்கள் இழந்திடும் மூச்சினை!!
அஃறினை ஆண்டிடும் இந்த மூடனை!!!

Wednesday, 6 November 2013

சரஸ்வதி பூஜையும் சமூகப் பிரச்சனையும்!!


பூஜை அறையில்,
அணி வகுத்தது,
புத்தகங்களும் பேனாக்களும் !!

பக்கத்திலே பக்குவமாய்,
இடம் பிடித்தது,
தம்பூராவும் ஹார்மோனியமும் !!

சகலமும்  செய்வாள்
சரஸ்வதி - தந்தை
சொல்லி சென்றார் !!

நான் படித்த பாடம்,
சரஸ்வதியும் படிக்க,
புத்தகம் ஒன்று தேடினேன்!!

சென்னை தெருக்களில்
தேடி பிடித்து
சமர்ப்பித்தேன் சரஸ்வதிக்கு !!
"இந்தியாவின் சமூக பிரச்சனைகள்
                                 --இரண்டாம் பதிப்பு "