Thursday, 28 March 2013

சுகங்களின் சுமை!!!



நிமிடங்கள் ஒவ்வொன்றும்
  புதிதாய்   பூக்கின்றது ...
அவன் சிந்தும்  புன்னகையில்
 பூமியும்  பிடிக்கின்றது....
என்   பார்வை  அவனைத் தீண்ட
 ஆயிரம் கனவுகள் கொள்கின்றேன் ..
அடி தூரத்தில் அவன் வந்தால்
 சிலிர்த்து விலகி செல்கின்றேன் ...
ஒரு  வார்த்தை  பேசிடவே
 நூறு ஒத்திகை நடத்தினேன்...
ஒரு வார்த்தையும் அவன் செவியை
  தீண்டவில்லை  ஒரு பொழுதும்...
அவன்  காலணி சத்தம் போதும்
 அவன்  வருகையை கணிப்பதற்கு...
இருந்தும் அவன்  வரும் பாதையில்
 செல்ல தயங்கி நிற்கின்றேன்...
அவன் விரல் அசைவின் அழகையும்
 தவற விடாமல் ரசிக்கின்றேன்...
அவன்  பார்வை என்னை தீண்டினால்
 என் பார்வை விலக்கி  செல்கின்றேன் ...
அவனுக்காக  சேர்க்கும்  அன்பை  மறைப்பதும்
 புது வித சுகங்களின் சுமை தான்...!!

Wednesday, 20 March 2013

காடுகளுக்காக ஒரு நாள் !!!

மனித இனம் தோன்றிய இடமும்  அதுவே
மனிதத்தை வளர்த்த மண்ணும் அதுவே
நம் சுவாசத்தின் பிறப்பும் அங்கேயே
நம் சாம்பல் சேர்வதும் அங்கேயே
வாழ்வதற்காக செய்யா விட்டாலும்
நம்மை சாம்பல் செய்திட நிச்சயம்
மரம் என்னும் இனம் தேவை ...!!
இனப்படுகொலை எங்கும் வேண்டாம் !!!


என் மனமும் உன் நிழலும்!!!

நினைவுகளாய் சேர்த்து  வைத்த
 நொடிகள் ஒவ்வொன்றும் ,
வலிகளாய் நிதம் மாறி
  நெஞ்சை நொடிக்கின்றது ..
கை  கோர்த்த தருணம்
   கசந்து  நிற்கின்றது ...
சிந்திய சிரிப்புகள் எல்லாம்
 சிதைந்து கிடக்கின்றது ..
தீட்டிய வர்ணங்கள் அனைத்தும்
வெறுமையாய் மாறுகின்றது ...
வார்த்தைகளாய் பதிவு செய்தாலும்
 வேதனைகள் குறைவதில்லை ...
உந்தன் நிழல் நிஜமாகி
 கைகள் கோர்த்து ,
உன் தோளில் சாய்ந்திட
வாய்ப்புகளும் ஏதும்  இல்லை ... !!

Tuesday, 19 March 2013

உன் அன்பிற்கான என் பதில் !!!

நீ சேர்க்கும் ஆசைகளில்
என் இதயத்தையும் சேர்க்க நினைப்பாய் ...
நீ பார்க்கும் திசைகளில்
என்  கனவுகளையே  முன் வைப்பாய்...
உன் வாழ்க்கை  பக்கங்களில்
என்னை மட்டும் நிறைக்கின்றாய்...
எனக்கே  தெரியாமல் ,
என்னை  மெல்ல வென்றாய் ...
இந்த  அன்பிற்கு பதில் கேட்டால்
என் இதயம் என்ன சொல்லும்...
இதழ் சிந்தும் புன்னகையை  மீறி
வேறு ஏது பதில் ஆகும்... !!!

Friday, 15 March 2013

உன் சுவாசம் என் வாசமாக..!!!

ஒரு முறை உன் சுவாசம் கலந்து ,
 உன்னுள் சென்று வரவா ...
உன் இதயத்தில் எந்தன் காதலை ,
 கொஞ்சம் சொல்லி வரவா...
உன்  இரத்த துளிகளில் நுழைந்து ,
 சிறு முத்தம் தந்திடவா ...
உன் நரம்பு தூண்களை  பிடித்து ,
 உனக்குள்ளும்  காதல் பூசிடவா ....
என் வழியில் உன் துணை சேர்க்க ,
 ஒரு முறையேனும் பார்வை தந்துவிடு ....!!!

Thursday, 14 March 2013

சாலை நெரிசலில் தொலைத்த இதயம் !!!

என் ஹெல்மெட்டை துளைத்தது
ஒரு பூவின் வாசம் ...
நான்  பார்த்ததும் தெரிந்தது
அது ஒரு பெண்ணின் சுவாசம் ...
அவள் பார்வையில் நொடியினில்
என் இமைகள் உறைந்து போனது..
அந்த கருவிழி ஓட்டத்தில்
என் நரம்பும் சிலிர்த்தது ...
சற்றும் தாமதிக்காமல் சட்டென்று
சரண் புகுந்தது அவளிடம்...
என் இதயம்....
என்னையும்  கேட்காமல் ...!!!

இதய தவிப்பு !!!


உன் விழி பார்த்த காரணத்தால்,
நிலவு வெட்கி உள்  சென்றது...
உன் இதழ் சிந்திய சிரிப்பில்,
கவியும் வார்த்தைகள் கோர்ப்பதை மறந்தான் ...
உன் கால் சுவடை தீண்ட,
கடல் அலையும் போட்டி போடுகின்றது...
உன் கூந்தல் வருடிச் செல்ல, 
தென்றல் காற்றும் தவம் கொள்கின்றது..
ஐயோ !!
அந்த நெற்றி முடியின் ஓரத்தில் ,
என் குட்டி இதயம் தவிக்கின்றதே ... 

Wednesday, 13 March 2013

உனக்கான காத்திருப்பு...!!!


வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
தடயம் சொல்வது உன்  பெயர்  தான்...
போகும் பாதையில் நின்று பார்க்கிறேன்
தடயம் தந்திட உன் கால்கள் இல்லையே...

விண்ணை எட்டி பிடிக்க,
நிலவை கட்டி அணைக்க,
தோழி மட்டும் போதும் -உன் போல்
தோழி மட்டும் போதும்!!

எங்கு சென்று கற்று கொள்வேன்
உன் நினைவுகளை மறப்பதற்கு...
என்னை தழுவும் தென்றல் காற்றும்
உன் நினைவைத்  தானே  தருகின்றது...

ஓடும் நதியில் கால்கள் நனைத்தது,
ஒன்றாய் சேர்ந்து நிலவை ரசித்தது,
பாடல் பாட மெட்டு அமைத்தது,
புது கதை கூறி சிரித்து மகிழ்ந்தது...

சாலை கடக்க பிடித்த கைகள்,
கண்கள் துடைக்க வந்த விரல்கள்,
நம்பிக்கை தந்த அந்த பார்வைகள்,
தைரியம் தந்த சின்ன வார்த்தைகள்...

மறக்கும் நிலையில் எதுவும் இல்லை,
உன்னை கைவிடும் நிலையில் மனமும் இல்லை...
உதிரம் உறையும் நிமிடம் வரையிலும்,
உன் நினைவோடு நிச்சயம் காத்திருப்பேன்...!!

நிலவுக்கு காத்திருக்கும் அல்லியும்,
வார்த்தைக்கு காத்திருக்கும் கவிஞனும்,
விடியலுக்கு காத்திருக்கும் இரவும்,
என்னை போல் காத்திருக்க முடியாது..

வழி மீது விழி வைத்து,
விழியோடு வலி வைத்து,
மீண்டும் கை கோர்க்க வருவாய் என...
உனக்காக காத்து இருக்கின்றேன்....!!!

பெண்மையின் தேடல்..!!!


செவியோரம் வார்த்தைகளை, 
 முதல்முறை தேடுகின்றேன்!!
கூந்தல்நுனி கோதிடவே ,
 விரல்களை தேடுகின்றேன்!! 
விண்மீனின் சிமிட்டலுக்கும்,
 புன்னகை தருகின்றேன் !!
மண்ணோடு பேசிடவே ,
 பழகி பார்க்கின்றேன்!!
விழியோடு சேர்த்துவைக்க 
உன் மனதை தருவாயா ...!!

உலகம் அழியட்டும்!!!


சுவாச காற்றை சூறையாடி 
கூறு போட்டு விற்கும் 
வர்க்கம் உருவாகுமானால் 
இந்த உலகம் நிச்சயம் 
அழிந்தே தீர வேண்டும்...!!!

உலக மகளிர் தின வாழ்த்துகள் !!!!

பூலோகம் நம்மை அறிந்ததும் ,
பூலோகத்தை நாம் அறிந்ததும் ,
தாய்மையின் ஒவ்வொரு அசைவுகளினால் ... 
உலக உருண்டை உறைந்து போகும், 
மகளின் இதழ்கள் சுவடுகள் சேர்க்கையில்...
தோல்விகள் அனைத்தும் துவண்டு நிற்கும்,
தோழியின் கைகள் தோளை தொடுகையில்..
பிரபஞ்சம் வென்ற திமிர் தொற்றிகொள்ளும் ,
காதலியின் விழி சேர்க்கும் நம்பிக்கையில் ..
வாழ்க்கை அர்த்தம் நொடியில் புரியும் ,
மனைவியின் சர்க்கரை மறந்த காபியில் ...
பெண்மையின் பெருமையை விதைத்ததால்,
மண்ணின் பெருமையும் ஓங்கியது...
என் சிந்தனையும் அதிர்ஷ்டம் பெற்றது ,
பெண்மையை போற்ற வார்த்தைகள் கண்டதால் ...!!!